ரூ.25 ஆயிரம் மட்டும் அபராதமா? பாஜக பிரமுகர் கண்டனம்
மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அபராதமா? என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காத எட்டு ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்துடைப்பு நாடகமே.
பல கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த பணிக்கு சொற்ப அபராதம் விதிப்பது மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து செயல்படும் அரசின் அலட்சியப்போக்கே. பாதுகாப்பு விதிகளை காற்றில் பறக்க விட்டு , மக்களை கடும் இன்னல்களுக்கு உள்ளாக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.
சாலைகளை தோண்டி விட்டு மக்களை வாட்டி வதைக்கும் ஒப்பந்ததார்களின் குரூர நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், இந்த பணிகளில் மிக பெரிய ஊழல் நடைபெறுவதாகவே மக்கள் எண்ணுவார்கள் என்பது கண்கூடு