ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! ஆற்காடு சுரேஷின் மனைவி கைது.! செப்.2 வரை காவல்.!!
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு கைது செய்யப்பட்ட நிலையில், அவரை செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருக்கே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என அடுத்தடுத்து கைதாகினர். பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகித்த போலீஸார் தலைமறைவாக இருந்த பொற்கொடியை தேடி வந்தனர்.
அவர் ஆந்திராவில் பதுங்கியிருப்பதை அறிந்த செம்பியம் தனிப்படை போலீஸார் அந்த பகுதியை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். இதையடுத்து பொற்கொடியை போலீசார் சென்னைக்கு அடுத்து வந்து விசாரணை நடத்தியதில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, பொற்கொடி கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை பொற்கொடியையும் சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.