செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (12:49 IST)

கேஷுவலாய் மது வாங்க வந்த கொரோனா நோயாளி! – தெறித்து ஓடிய மது பிரியர்கள்!

அரியலூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர் மது வாங்க டாஸ்மாக் வந்ததை தொடர்ந்து அந்த கடை முழுவதுமாக மூடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகளை திறப்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து மதுப்பிரியர்கள் கூட்டம் கடைகளை நோக்கி படையெடுத்தன. இதனால் நேற்று ஒரே நாளில் 172 கோடிக்கு மது வகைகள் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரியலூரில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை தவிர்த்து மாவட்டம் முழுவதிலும் 35 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அரியலூர் சராகத்திற்கு உடப்பட்ட மதுக்கடை ஒன்றில் கொரோனா பாதிப்பு உள்ள ஒருவர் மது வாங்கி சென்றுள்ள செய்தி பரவியது மது பிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட மதுக்கடையை மூட ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ் உத்தரவிட்டதன் பேரில் அந்த மதுக்கடை மூடப்பட்டுள்ளது.