1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (15:18 IST)

நான் கருணாநிதியின் மகன் ; சொன்னதை செய்து காட்டுவேன் : அழகிரி அதிரடி பேட்டி

தனது தலைமையில் கூடும் பேரணியில் நிச்சயம் ஒரு லட்சம் பேர் திரள்வார்கள் என அழகிரி பேட்டியளித்துள்ளார்.

 
திமுகவின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்று கொண்ட மு.க.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் போன்ற முன்னாள் அமைச்சர்களை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்ட நிலையில் அழகிரிக்கு மட்டும் அவர் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. இவ்வளவிற்கு ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார் என்று அழகிரி வாய்விட்டு சொன்ன பிறகும் ஸ்டாலின் மெளனம் தொடர்கிறது.
 
வருகிற 5ம் தேதி சேப்பாக்கம் முதல் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதி வரை பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஆதரவு கிடைக்கவில்லை என செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி “ நான் கருணாநிதியின் மகன். சொன்னதை செய்வேன். வரும் 5ம் தேதி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பேரணியில் கலந்து கொள்வார்கள்” என அவர் தெரிவித்தார். 
 
அப்போது, மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்கிறேன் என நீங்கள் கூறிய பின்பும் உங்களுக்கு திமுகவிலிருந்து அழைப்பு வரவில்லையே? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு ‘ இந்த கேள்விக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை’ என தெரிவித்துவிட்டு அவர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.