1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (14:06 IST)

சொத்து பிரச்சனையால் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

விருதுநகர் அருகே வாலிபர் ஒருவர், தந்தையிடம் சொத்துக்களை பிரித்து தரக்கோரி செல்போன் டவரில் ஏறி  தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயபாண்டி. இவர் சொத்துக்களை பிரித்துத் தரக் கோரி தனது தந்தையிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் இதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்தார்.
 
இந்நிலையில் ஜெயபாண்டி தனது தந்தையின் கடைக்கு சென்று சொத்துக்களை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் ஜெயபாண்டியை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினர். இதனால் தந்தை மீது ஆத்திரமடைந்த ஜெயபாண்டி, செல்போன் டவரில் ஏறி, சொத்துக்களை உடனே பிரித்து தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஜெயபாண்டியை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.