விறகு எடுக்கச் சென்ற குடும்பம்: 3 வயது மகனை தள்ளிவிட்டு - தந்தையை தாக்கி கொன்ற காட்டு யானை!
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கல்பனா. இவர்களது மூன்று வயது மகன் அனீஷ். இந்நிலையில் குமார் தர்மபுரியில் இருந்து வடவள்ளி ஐ.ஓ.பி காலனியில் உள்ள கணபதி நகரில் இருக்கும் தனது மாமியாரின் வீட்டுக்கு வந்தார்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இங்கு தங்கி உள்ளார். தனது மனைவி மற்றும் மகனுடன் வனப் பகுதியில் விறகு சேகரிக்க சென்று உள்ளார். சுமார் மாலை 5 மணி அளவில் அவரது மனைவி கல்பனா அவரது கணவர் குமாரை அழைத்து காட்டு யானை எதிரில் வருகிறது என்று சத்தம் போட்டார். இதை தொடர்ந்து மனைவி கல்பனா கீழே உள்ள பள்ளத்தில் விழுந்தார். யானையை பார்த்த சிறுவன் அனீஸ் அவனது தந்தையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.
ஆனால் காட்டு யானை குமார் அருகில் வந்து குழந்தை அனீசை தள்ளிவிட்டு விட்டு குமாரை மிதித்து வீசியது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்தில் இறந்து போனார். இதை பார்த்த அவர் மனைவி கல்பனா அதிர்ச்சி அடைந்தார். ஊருக்குள் வந்து காட்டு யானை தனது கணவரை தாக்கியதை அக்கம், பக்கத்தில் தெரிவித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து அங்கு வந்த வனத் துறையினர் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் இறந்து போன குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். அவரது மனைவி கல்பனா மற்றும் மகன் அனீசை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர். காட்டு யானை குழந்தையை விட்டு விட்டு தந்தையை மிதித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.