புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (08:50 IST)

இன்று 383வது சென்னை தினம்! – சென்னை மாநகரம் உருவானது எப்படி?

madras
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உருவாகி 383 ஆண்டுகள் நிறைவடைந்தது இன்று “சென்னை தினமாக” கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை இந்தியாவின் முக்கியமான வர்த்தக நகரங்களில் ஒன்றாகும். “வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி என பல தேவைகளுக்கு சென்னை நோக்கி நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை வந்து பிழைத்தோர் ஏராளம்.

தன்னை நம்பி வருவோரை கை விடாமல் ஏதோ ஒரு வகையில் உதவிக் கொண்டே இருக்கிறது சென்னை. அப்படிபட்ட இந்த மாநகர் உருவாகி 383 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மாநகர் உருவான நாளை “சென்னை தினம்” என மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சென்னை மாநகர் எப்படி உருவானது தெரியுமா?

கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன் சென்னை ஒரு மக்கள் அடர்த்தியற்ற சாதாரண நிலபரப்புதான். கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்னரே இந்தியாவில் கால்பதித்த போர்த்துகீசியர்களும், டச்சு, ஸ்பானியர்களும் அரபிக்கடலில் தங்கள் வணிகத்தை பலப்படுத்தி இருந்தனர்.
Madras

கிழக்கு தீவு நாடுகளுடனான வர்த்தகத்திற்காக டச்சுக்காரர்கள் புலிக்காடு உப்பு ஏரியை வணிக துறைமுகமாக பயன்படுத்தி வந்தனர். புதுச்சேரி பிரெஞ்சு காரர்கள் வசம் இருந்தது. இந்த நிலப்பகுதிகளுக்கு இடையே வணிகத்திற்கு ஏற்றார் போல ஒரு நிலபரப்பு கிழக்கிந்திய கம்பேனிக்கு வேண்டியதாக இருந்தது. அப்போது சென்னை கடற்கரையை தாண்டி இருந்த மற்ற ஊர்களான திருவெல்லிக்கேணி, மாம்பலம் போன்றவை விவசாய தொழிலை கொண்டு இயங்கி வந்தன.

சென்னை கடற்கரை பகுதி வணிக கப்பல்கள் சென்று வர சரியாக இருக்கும் என்று கணித்த கிழக்கிந்திய கம்பெனி அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த டாமர்லா வெங்கடப்பா என்பவரிடம் அப்பகுதில் கோட்டை குடியுருப்புகள் அமைக்கவும், சுற்றுப்புற நிர்வாகம் செய்யவும் அனுமதி பெற்றனர். இந்த அனுமதி 1639ம் ஆண்டு ஆகஸ்டு 22ம் தேதி கையெழுத்தானது. இந்த தினமே சென்னை தினம் என கொண்டாடப்படுகிறது.

பின்னர் ஆடை வணிகத்தை மையமாக கொண்டு அங்கு தொழிற்சாலைகளையும், கோட்டையையும் அமைத்தது கிழக்கிந்திய கம்பெனி. கம்பெனிக்காக ஆடை வேலைகளுக்காக நெசவாளிகள் பலர் கோட்டை அருகே நிரந்தர குடியிருப்புகள் அமைத்து தங்க தொடங்கினர். தொழிலாளர்கள் வசித்த பகுதி ப்ளாக் டவுன் (கறுப்பர் நகரம்) என்றும், கிழக்கிந்திய கம்பெனியினர் வசித்த பகுதி ஜார்ஜ் டவுன் என்றும் வழங்கலாயிற்று. இப்படியாக கடற்கரையோரமாக உருவான நகரம் பின்னர் படிப்படியாக சுற்றுபுறத்தில் இருந்த மற்ற ஊர்களையும் உள்ளே ஈர்த்துக் கொண்டு சென்னை மாநகரமாக வலுபெற்றது. அன்று முதல் இன்று வரை இந்தியாவின் முக்கியமான வணிக நகரங்களில் ஒன்றாக சென்னை இருந்து வருகிறது.