வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (10:44 IST)

பணியின் போது மது அருந்திய 2 காவலர்கள்..! பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. அதிரடி உத்தரவு.!!

karur collector
கரூர் அருகே பணியின் போது மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி, அறிவாலுடன் நடந்து சென்று ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்ட இரண்டு காவலர்களை மாவட்ட எஸ்பி  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் யுவராஜ் முதல் நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது கரூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 8-ல் பணியில் இருந்தனர்.
 
இந்நிலையில் கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புன்னம்சத்திரம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் காவலர்கள் இருவரும்,  மது அருந்திவிட்டு, அப்பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் ஆண் சடலம் கிடந்தது தொடர்பாக  விசாரணைக்கு சென்றனர். 
 
அப்போது யுவராஜ் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரும் அதிக மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பொதுமக்களிடம் ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், ஆபாச வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. 
 
குறிப்பாக பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்ததால் ஆவேசம் அடைந்த கோபிநாத் என்ற காவலர் அறிவாலுடன் நடந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.