மும்பை பங்குச் சந்தையில் நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கிய பத்து நிமிடத்திலேயே 1,703 புள்ளிகள் சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டியும் 524 புள்ளிகள் சரிந்தது. இதனால் இரண்டு பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது.
இதற்கு காரணம் என்ன?
செபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் ஆப் இந்தியா) என்ற அமைப்பு 1992 ஆண்டுகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களை (FII) இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதித்தது. இவர்கள் தங்களின் முதலீட்டில் இருந்து இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வார்கள் என்று நினைத்தனர்.
அந்த நேரத்தில் பொருளாதார சீர்திருத்தம் காரணமாக அந்நிய நிறுவனங்களை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மூலதனச் சந்தையில் நுழைய அனுமதிப்பது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சில குரல்களும் எழுந்தன. ஆனால் இவர்களை பத்தாம் பசலிகள் என்று ஏளனம் செய்து, அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர்களின் தாக்குதலை எல்லாம் தாக்குப்பிடித்து நிமிர்ந்த நடை போடும் ஆற்றல் இந்திய பொருளாதாரத்திற்கு உண்டு என்று நெஞ்சை நிமிர்த்தி பதில் கூறினார்கள். இதற்கு உதாரணமாக மற்ற ஆசிய நாடுகளில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டாலும் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று உதாரணத்துடன் இந்த பொருளாதார புலிகள் பதிலளித்தனர்.
ஆனால் அந்த நேரத்தில் இந்திய மூலதனச் சந்தையில் அந்நிய மூலதனம் கண்ணுக்கு தெரியாத அளவே இருந்தது என்பதை வசதியாக மறந்து விட்டு பதிலளித்தனர். அந்நிய முதலீட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றவர்களே இப்போது சில கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அமல் படுத்த எண்ணினார்கள்.
இதன் ஒரு அம்சம் தான் செவ்வாய்க் கிழமை மாலையில் செபி அமைப்பு சில கட்டுப்பாடுகளை விதிக்க எண்ணியுள்ளதாக அறிவித்தது. இதன்படி பார்ட்டிசிபேட்டரி நோட் மூலம் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் வாயிலாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் செபியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
|