நவராத்திரியின்போது கொலு பொம்மைகளை எந்த முறையில் வைக்கவேண்டும் தெரியுமா!
நவராத்திரி விழாக்கள் தென் இந்தியாவில் வேறு மாதிரியான வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழகத்திலும், ஆந்திராவிலும் கொலு வைத்து வணங்குவது பாரம்பரியமாக தொடர்கிறது.
வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வணங்குதலோடு தினம் சுமங்கலி பெண்களுக்கு உணவு படைப்பது செல்வத்தை அளிக்கும். புழுவாகவும், மரமாகவும் அவதரித்து மனிதனாகி இறுதியில் இறைவனடி சேர்வோம் என்பதுதான் இதன் தத்துவம். ஒன்பது அல்லது ஒற்றைப் படையில் வருவதுபோல் கொலு வைப்பது முறை. விநாயகரை வைத்த பின்தான் மற்ற பொம்மைகளை வைப்பது ஐதீகம்.
முதல் படியில்: ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.
இரண்டால் படியில்: இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
மூன்றாம் படியில்: மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
நான்காவது படியில்: நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஐந்தாம் படியில்: ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள் போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஆறாம் படியில்: ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஏழாம் படியில்; சாதரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
எட்டாம் படியில்: தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்ச பூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படியில்: முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில் சரஸ்வதி-லட்சுமிக்கும் நடுவில் சக்திதேவி இருக்க வேண்டுமாம்.
ஒன்பது படிகள் இயலவில்லை எனில் ஒற்றை படை எண்களில் அமைக்கலாம். இந்த வழக்கம் முந்தையா மன்னர் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது.