வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 மே 2018 (11:40 IST)

ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் இருவர் மாயம் - கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்கிற விவகாரத்தில் குழப்பம் நீடிக்கும் நிலையில், ம.ஜ.த கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் மாயமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக,  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது.  அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.  
 
எனவே, மஜத கட்சியிலிருந்தோ, அல்லது காங்கிரஸ் கட்சியிலிருந்தோ சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைக்க முயலும் எனக் கூறப்பட்டது. அல்லது, மஜதவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டது. பாஜக மேலிட தலைவர்கள் குமாரசாமியிடம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி “பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுத்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
 
இந்நிலையில், ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி தலைமையில் இன்று காலை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு தேர்தலில் வெற்றி பெற்ற ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ராஜா வெங்கடப்பா நாயக்கா மற்றும் வெங்கட ராவ் நாதகவுடா என்கிற 2 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இதனால், அக்கட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம் என செய்தி வெளியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 2 எம்.எல்.ஏக்கள் மாயம் என செய்தி வெளியாகியுள்ளது.  ஒருவேளை அவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து விட்டதா என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.