மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கேப் டிரைவர் மற்றும் போலீஸார் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பையில் சமீபத்தில் 21.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு கட்டப்பட்ட அடல் சேது பாலம் இந்தியாவின் மிக நீளமான பாலமாக சாதனை படைத்தது. ஆனால் இந்த பாலத்தில் சமீப காலமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் காரில் சென்ற நபர் ஒருவர் காரை நிறுத்திவிட்டு திடீரென பாலத்தில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோன்ற மற்றொரு தற்கொலை முயற்சியும் தற்போது நடந்துள்ளது. வாடகை காரில் அடல் சேது பாலம் வழியாக சென்ற பெண்மணி ஒருவர் காரை பாலத்தின் ஓரமாக நிறுத்த சொல்லியுள்ளார். டிரைவரான சஞ்சய் யாதவ் காரை நிறுத்திய நிலையில் திடீரென அந்த பெண் தடுப்பு சுவரை தாண்டியுள்ளார். அதில் அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியுள்ளார்.
அவரது நடவடிக்கையால் சந்தேகமடைந்த சஞ்சய் யாதவ், போலீஸுக்கு தகவல் அளித்ததுடன், அந்த பெண் குதித்து விடாத வகையில் தொடர்ந்து பேச்சு கொடுத்து வந்துள்ளார். ஆனால் போலீஸ் வாகனம் வருவதை பார்த்ததும் உடனே அந்த பெண் குதித்துள்ளார். ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்ட சஞ்சய் யாதவ் தடுப்பு கட்டைகளுக்கு இடையே கையை விட்டு பெண்ணின் தலைமுடியை பிடித்து விட்டார்.
அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணை போலீஸார் தடுப்பு கட்டைகள் மீது ஏறி உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர். விசாரணையில் பண கஷ்டம், கடன் தொல்லை காரணமாக அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீஸார் அவரது குடும்பத்தினரை வர செய்து அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கேப் டிரைவரும், காவலர்களும் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
Edit by Prasanth.K
A 56-year-old woman , attempted to jump off Atal Setu in Mumbai, but was saved by the quick thinking of a car driver and police personnel.
— Raj (@rajmdu82) August 17, 2024
personal salute to the cab driver for his quick reaction.#atalbridge #mumbai #AtalSetu pic.twitter.com/LrcSTkJMRR