புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (12:12 IST)

அதானி நிறுவனத்தில் பங்கு வைத்துள்ள செபி தலைவர்? அம்பலப்படுத்திய ஹிண்டென்பெர்க்! - பரபரப்பு சம்பவம்!

அதானி நிறுவன மோசடிகளை செபி விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது செபி அமைப்பின் தலைவரே அதானி நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டென்பெர்க் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ஹிண்டென்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம், சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில், பெரும் நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அப்படியாக கடந்த சில காலம் முன்னதாக அதானி நிறுவனம் போலியான நிறுவனங்களை உருவாக்கி தனது பங்குகளை தானே வாங்கி பங்கு மதிப்பை உயர்த்தியதாக ஹிண்டென்பெர்க் குற்றம் சாட்டியது.

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி முறைகேட்டை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை விசாரித்த உச்சநீதிமன்றம், இதை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

ஆனால் தற்போது இந்த வழக்கை விசாரிக்க உள்ள செபி அமைப்பின் தலைவரே அதானி நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதாக ஹிண்டென்பெர்க் குற்றம் சாட்டியுள்ளது. செபி எனப்படும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவரான மாதபி புரி புச் மற்றும் அவரது கணவரும் பல்லாயிரக்கணக்கான பங்குகளை அதானி நிறுவனத்தில் வாங்கியுள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தீவிரமான விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

 

Edit by Prasanth.K