ஆதார் எண்ணை இணைக்க வேண்டாம்; எல்ஐசி எச்சரிக்கை
காப்பீட்டு பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
அனைத்து துறைகளும் தற்போது ஆதார் எண் பெறுவதை கட்டாயமாக்கி வருகிறது. முதலில் மத்திய, மாநில அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வந்தது. இதையடுத்து செல்போன் எண், எல்.ஐ.சி, வங்கி கணக்கு உள்ளிடவையுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் உடன் இணைக்கும் வசதி இன்னும் செயல்பாடு வடிவில்தான் உள்ளது. எனவே பாலிதாரர்கள் யாரும் எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்க முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் எல்ஐசி முத்திரையுடன், பாலிசிதாரர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம் என தகவல் பரவி வருகிறது. இதையடுத்து எல்ஐசி நிறுவனம், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.