கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் இது! – பிரதமர் மோடி!
பாஜகவின் 40 வது ஆண்டு விழாவில் பாஜக தொண்டர்களுக்கு பேசிய பிரதமர் மோடி கொரோனா எதிர்ப்பு குறித்து பேசியுள்ளார்.
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி ஏப்ரல் 5 (நேற்று) இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றும்படியும், டார்ச் லைட் அடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அதை தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம், மெழுகுவர்த்தி ஏற்றினர். பல பிரபலங்களும் தாங்கள் தீபம் ஏற்றியதை இணையத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில் இன்று பாஜக கட்சி தொடங்கி 40 ஆண்டுகள் ஆனதை ஒட்டி பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வீடியோ வழியாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ”கொரோனாவை தடுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னொடியாக இந்தியா திகழ்கிறது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா கையில் எடுத்துள்ள நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியுள்ளது. 130 கோடி மக்களின் ஒற்றுமையை நேற்று இரவு நாம் கண்டிருப்போம். தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிரான இந்த நீண்ட போரில் இந்தியா வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.