வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (12:22 IST)

ஏட்டு சுரைக்காய் போல பேசாம காசை வசூல் பண்ணுங்க! – ப.சிதம்பரம் ட்வீட்!

மல்லையா உள்ளிட்ட 50 பணக்காரர்களின் கடன் விவகாரத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து பணத்தை வசூல் செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு இந்திய பணக்காரர்கள், நிறுவன தலைவர்கள் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்து வருகின்றனர். கடன் வாங்கி திரும்ப செலுத்தாத முன்னணி தொழில் நிறுவனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தன்னார்வலர் ஒருவர் கோரியிருந்தார்.

அந்த தகவலின்படி விஜய் மல்லையா தனது விமான நிறுவனம் மீது பெற்ற ரூ.1,943 கோடி, வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மீது வாங்கப்பட்ட ரூ.5,492 கோடி கடன் உள்பட மொத்தம் 50 இந்திய செல்வந்தர்களின் வங்கி கடன் தொகையான ரூ.68,607 கோடி கடன் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் கணக்கியல்ரீதியான் கடனை நீக்குவது என்பது முழுவதுமாக கடனை நீக்குவது ஆகாது என்றும், கணக்கில் நீக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து கடன் தொகையை பெற சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ”கடனை வங்கிகள் தள்ளுபதி செய்ததா? நிறுத்தி வைத்ததா? என்று பேசுவது ஏட்டு சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையால் மகிழ்ச்சியடைபவர்கள் நீரவ் மோடி, மல்லையா போன்றவர்கள்தான். ரிசர்வ் வங்கி செல்வந்தர்களின் கடன்களை வாராக்கடனில் எழுதி கடனை வசூலிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்” என கூறியுள்ளார்.