கடைக்கு போக சொன்னால் கல்யாணம் செய்து வந்த மகன்! – அதிர்ச்சியடைந்த தாய்!
உத்தர பிரதேசத்தில் மளிகை பொருட்கள் வாங்க சென்ற மகன் ஒரு பெண்ணை திருமணம் முடித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஹூடு என்பவரை மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு அனுப்பியுள்ளர் அவரது தாயார்.
ஹூடு ஏற்கனவே சுவேதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள் திருமண சான்றிதழ் கிடைப்பதற்காக காத்துள்ளனர். அதுவரை சுவேதாவை டெல்லியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளார் ஹூடு. இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் சுவேதாவை வீட்டை காலி செய்ய தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த ஹூடு மளிகை பொருட்கள் வாங்க வெளியே சென்றபோது அதை வாய்ப்பாக பயன்படுத்து நேராக டெல்லி சென்று சுவேதாவை அழைத்துக் கொண்டு காசியாபாத் வந்துள்ளார். மளிகை சாமான் வாங்க சென்ற மகன் திருமண கோலத்தில் வந்து நின்றதை கண்ட ஹூடுவின் தாய் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்துள்ளார்.
செய்தியறிந்த காசியாபாத் போலீஸார் அங்கு விரைந்து ஹூடுவின் தாயாரிடம் சமாதான பேச்சு வார்த்தை செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்ததால் ஹூடு தம்பதியினர் டெல்லியில் இருந்த வாடகை வீட்டிற்கே திரும்ப அனுப்பப்பட்டனர். மளிகை பொருட்கள் வாங்க சென்று மணம் செய்து வந்த ஹூடுவின் சம்பவம் காசியாபாத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.