செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 18 மே 2024 (12:39 IST)

X தளத்திலிருந்து கெஜ்ரிவால் படம் நீக்கம்.! ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுகிறாரா மாலிவால்.?

Aravind Kejriwal
ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் தளத்தில் இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, கருப்பு நிறத்தில் டிபி வைத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து வீடு திரும்பிய முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திப்பதற்காக அக்கட்சியின் எம்பியான ஸ்வாதி மாலிவால் அவரது வீட்டிற்கு கடந்த மே 13ம் தேதி சென்றார்.

அப்போது முதலமைச்சரின் உதவியாளர் பிபவ் குமார், தன்னை தாக்கியதாக டெல்லி போலீசாரிடம் அவர் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டெல்லி மாநில அமைச்சர் அதிஷி விளக்கம் அளித்து இருந்தார்.

அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளியே வந்ததிலிருந்து, பாஜக பல்வேறு வகைகளில் அவருக்கு இடையூறு செய்து வருகிறது என்றும் முதலமைச்சர் இல்லத்திற்கு வந்து அவரை பார்க்க வேண்டும் என ஸ்வாதி பிரச்சினை செய்தார் என்றும் தெரிவித்துள்ளார். எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பது போன்று எதுவும் நடக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே ஸ்வாதி இது போன்று செய்து வருகிறார் என்று அதிஷி குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் கெஜ்ரிவால் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருந்தார்.


அதில் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய அச்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த புகைப்படத்தை நீக்கி விட்டு கருப்பு நிற டிபியை ஸ்வாதி வைத்துள்ளார். இதனால் அவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.