2ஜி வழக்கு : இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு
நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது..
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு 2ஜி வழக்கு குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போனது.
இந்நிலையில், 2ஜி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கின் தீர்ப்பால், பல அரசியல் திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஆர்.ராசா மற்றும் கனிமொழி, துரைமுருகன், ராசாத்தி அம்மாள் உள்ளிட்டோர் இன்று காலை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.