வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (15:34 IST)

3 பேர் விடுதலையை எதிர்த்து போராடுவேன் - கௌசல்யா பேட்டி

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரின் விடுதலையை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துவேன் என சங்கரின் மனைவி கௌசல்யா பேட்டியளித்துள்ளார்.

 
உடுமைலைப்பேட்டி அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர், பழனியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். அந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பட்டப்பகலில் அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் நடுரோட்டில் அரிவாளால் வெட்டி சாய்த்தது.  
 
இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதி அலமேலு நடராஜன் இன்று தீர்ப்பு வழங்கினார். கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், செல்வகுமார், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல்ராஜ் ஆகிய 6 பேருக்கும் தூக்கு தண்டனையும், 9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளர்.
 
ஆனால், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில் இந்த தீர்ப் பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கௌசல்யா “எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது. 6 பேருக்கு தூக்கு தண்டனை கிடைத்துள்ளது. தூக்கு தண்டனை குறித்து என்னுடைய பார்வை வேறு என்றாலும், சாதி வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தும். இந்த தீர்ப்பு ஒரு நல்ல முன்னூதாரணம். எனவே, இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
 
அதிலும்,  இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் தண்டனை என இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி தீர்ப்பு வந்துள்ளது. தண்டனையை எதிர்த்து 6 பேரும் மேல் முறையீடு செய்தாலும், அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவேன். அதேபோல், எனது தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராகவும் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளேன். 
 
அவர்களால் எனக்கும், சங்கரின் குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, போலீசார் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என அவர் கூறினார்.