இத்தாலியில் 112 பேர்; ஈரானில் 234 பேர் – மீட்டு வந்த இந்தியா!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் சிக்கிய இந்திய மாணவர்கள் மீட்டு வரப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. தற்போது சீனாவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் வைரஸ் தீவிரமடைந்துள்ளது.
தற்போது இத்தாலியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,441 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் சகல விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால், திரையரங்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு, சாலைகள் முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து படிக்க சென்ற மாணவர்கள் 112 பேர் இத்தாலியில் சிக்கியிருந்தனர். தங்களை மீட்டு செல்லுமாறு இந்திய அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அவர்களை மீட்க சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
இதேபோல ஈரானில் சிக்கியிருந்த 234 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.