”வீதிக்கு வந்துவிடுவோம் என நினைத்தோம்; ஆனால் இந்து சகோதரர்கள் அடைக்கலம் தந்தார்கள்”.. நெகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்
”வீதிக்கு வந்துவிடுவோம் என நினைத்தோம்; ஆனால் இந்து சகோதரர்கள் அடைக்கலம் தந்தார்கள்”.. நெகிழ்ச்சியில் டெல்லி இஸ்லாமியர்கள்
டெல்லி கலவரத்தில் வீடுகளை இழந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் அடைக்கலம் தந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று காலை வரை பலி எண்ணிக்கை 30 ஆக இருந்தது. தற்போது சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே இஸ்லாமியர்கள் வசிக்கும் அசோக் நகர் பகுதியில் மசூதி ஒன்று கலவரக்காரர்களால் இடிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியிலுள்ள இஸ்லாமியர்களின் 40 வீடுகளையும், கடைகளையும் எரித்துள்ளனர். அங்குள்ள பலரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செய்வதறியாது திகைத்த இஸ்லாமியர்களுக்கு, அருகில் வசித்து வந்த இந்துக்கள் அடைக்கலம் தந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் , “தாக்குதல் நடத்தியவர்கள் கைகளில் இரும்பு கம்பிகளை வைத்திருந்தனர். தங்களது முகங்களை துணியால் மறைத்திருந்தனர். அவர்கள் பெரும்பாலும் வெளி ஆட்களாக இருந்தனர்” என கூறுகின்றனர்.
மேலும் அவர்கள், ”எங்கள் வீடுகளையும் கடைகளையும் அவர்கள் எரிக்க ஆரம்பித்தனர். நாங்கள் தெருவில் தான் தங்க வேண்டியது இருக்கும் என நினைத்திருந்தோம்,ஆனால் அண்டை வீடுகளில் இருந்த எங்கள் இந்து சகோதரர்கள் எங்களுடன் இருந்தனர். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். 25 ஆண்டுகளாக எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை, நாங்கள் ஒரே குடும்பமாக இருக்கிறோம்” என நெகிழ்ச்சியாக கூறுகிறார்கள்.