வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (12:35 IST)

மசூதியில் ஒலித்த மாங்கல்ய மந்திரம்.. மத நல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய திருமணம்..

கேரளா மாநிலத்தில் மசூதி ஒன்றில் இந்து மத சம்பிரதாயப் படி நடந்த திருமணம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கேரள மாநிலம் ஆழப்புழாவில், தான் ஏழை என்பதால் தனது மகள் அஞ்சுவுக்கு திருமணம் செய்து வைக்குமாறு செருவல்லி ஜமாத் கமிட்டியிடம் அஞ்சுவின் தாயார் உதவி கோரினார்.

அதனை கமிட்டி ஏற்றுக்கொண்டு மணமகளுக்கு 10 பவுன் தங்க நகைகளும், 2 லட்ச ரூபாய் ரொக்கமும் பரிசாக கொடுத்து, அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது.

செருவள்ளி முஸ்லிம் ஜமாத் மசூதியில் நடைபெற்ற இத்திருமணத்தில், இந்து முறைப்படி, புரோகிதர் முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். பின்பு மணமகன் சரத், மணமகள் அஞ்சுவின் கழுத்தில் தாலி கட்டினார். இத்திருமணத்தில் இந்து-முஸ்லீம் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். மேலும் இத்திருமணத்தில் கலந்துகொண்ட ஆயிரம் பேருக்கு சைவ விருந்து பரிமாறப்பட்டது.

இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இத்திருமண தம்பதியரின் புகைப்படத்தை பகிர்ந்து, மத நல்லிணக்கத்திற்கு எப்போதும் கேரள மாநிலம் உதாரணமாக திகழ்கிறது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.