Zoom ஆப் பாதுகாப்பானது அல்ல! – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
ஊரடங்கினால் வீடுகளில் இருந்து பணியாற்றி வரும் பலர் உபயோகித்து வரும் ஸூம் அப்ளிகேசன் பாதுகாப்பானது அல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தபடியே பணிபுரிய அனுமதித்துள்ளன. இந்நிலையில் வீடுகளில் இருந்து பணிபுரியும் பலர் உரையாடி கொள்ள, வீடியோ கான்பரன்ஸில் பேசிக் கொள்ள ஸூம் என்ற செயலியை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது யாரோ முறைகேடாக உள்நுழைந்து ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பியதாக புகார் எழுந்தது. மேலும் ஸூம் அப்ளிகேசனில் யார் வேண்டுமானாலும் எளிதாக ஹேக் செய்யும் அபாயங்கள் இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து அரசாங்க வீடியோ கான்பரன்ஸ் செயல்பாடுகளுக்கு ஸூம் அப்ளிகேசனை பயன்படுத்த வேண்டாம் என்று மத்தொய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அப்ளிகேசனை பயன்படுத்தும் மக்கள் தங்கள் சுயவிவர பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.