டெல்லியில் பீட்ஸா பாய்க்கு கொரோனா! – ஆர்டர் செய்த வீடுகளில் சோதனை!
டெல்லியில் பீட்ஸா டெலிவரி பணி செய்து கொண்டிருந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு தொழில் துறைகளுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் பிரபல பீட்ஸா நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 15 நாட்களில் அவர் பீட்ஸா டெலிவரி செய்த 72 வீடுகளின் விலாசங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.