வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:55 IST)

முதல்வராகும் உத்தவ் தாக்கரே? ஓய்ந்தது மகாராஷ்டிரா அரசியல் நாடகம்!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே இருப்பார் என சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 
 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனாவுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றதை தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே பல பேச்சுவார்த்தைகள் நடந்தன.
 
இதனையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
 
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம், நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தற்போது முதல்வர் ஃபட்நாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 
 
இந்நிலையில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித்பவார் எங்களுடன் தான் இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே இருப்பார் என தெரிவித்துள்ளார். 
 
முதல்வர் யார் என்ற இறுதி முடிவு இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் என தெரிகிறது.