23 நாட்களில் 13 லட்சம் பேர் ஐயப்ப தரிசனம்: சபரிமலை அப்டேட்!
சபரிமலை ஐயப்பன் கோவிலை இதுவரை 13 பக்தர்கள் தரிசித்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினம்தோறும் 50,000 – 70,000 பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். இதில் குறிப்பிடும் வகையில் நவம்பர் 26 மற்றும் 28 ஆம் தேதி, டிசம்பர் 5 ஆம் தேதி அதிக பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு தற்போது வரை 23 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த 23 நாட்களில் 14,91,321 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து 13,14,696 பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலையில் இன்று சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இன்று 1,07,695 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக சபரிமலை நடை திறக்கப்பட்ட 10 நாட்களில் 52.55 கோடி ரூபாய் வசூலாகியது. கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக பக்தர்கள் குறைவாகவே வந்ததால் 9.99 கோடியே வசூலாகி இருந்தது. மேலும் அரவணை பிரசாதம் நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் கண்டெய்னர்கள் விற்பனையாகி வருவதாக தேவசம்போர்டு தெரிவித்தது.