திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (10:21 IST)

கேரளாவில் பாஜக, மார்க்சிஸ்ட் ஆதரிக்கும் அதானி துறைமுகத்தில் வன்முறை வெடித்தது ஏன்?

அதானி துறைமுகம் என்று பரவலாக அறியப்படும் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்துக்குள் லாரிகளை அனுமதிக்கும்படி கூறப்பட்ட உத்தரவு எப்படி அமல்படுத்தப்பட்டது என்பது குறித்தும், கடந்த இரண்டு நாட்களாக நேரிட்ட வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெள்ளிக்கிழமை தெரிவிக்கும்படி கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
அதானி குழுமத்தின் விழிஞ்சம் சர்வதேச கடற்துறைமுகம் லிமிடெட் நிறுவனத்தின் மனுவின் மீதான வழக்கமான விசாரணை திங்கள் கிழமை நடைபெற்றபோது, நீதிபதிகள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
 
சனிக்கிழமையன்று நேரிட்ட வன்முறையின் போது கைது செய்யப்பட்ட ஐவரை விடுவிக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையம் தாக்கப்பட்டது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத சுமார் 3,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் இந்த வழக்கின் விசாரணை திங்கள் கிழமை நடைபெற்றது.
 
கற்பாறைகளை ஏற்றிக்கொண்டு துறைமுக வளாகத்துக்குள் நுழைய முயன்ற லாரிகளை ஒரு தரப்பினர் தடுக்க முயன்றனர். இன்னொரு குழுவினர் துறைமுகத்தின் கட்டுமானப்பணிகளுக்கு ஆதரவாக லாரிகளை அனுமதிக்கும்படி கோரினர். எனவே ஒரு கட்டத்தில் இந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது.
 
லத்தீன் கத்தோலிக்க திருச்சபை பாதிரியாரின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவோர், துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கியதில் இருந்து வடக்கு பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படும் கடல் அரிப்பு குறித்து முழுமையான அறிவியல்பூர்வமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
"இந்த ஆய்வு மேற்கொள்வதற்கு மூன்று மாதங்கள் மட்டும் தேவைப்படும். இப்போது 130ஆவது நாளாகப் போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொழியூர், அஞ்சுதெங்கு பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டதை ஏற்கனவே நாங்கள் பார்த்தோம். திருவனந்தபுரம் தவிர எங்கும் இதுபோன்ற போட்டி போராட்டம் நடப்பதை நீங்கள் பார்க்கலாம்," என லத்தீன் கத்தோலிக்க திருச்சபையின் வழக்கறிஞர் ஷெர்ரி தாமஸ் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
 
7,500 கோடி ரூபாய் மதிப்பிலான விழிஞ்சம் துறைமுக திட்டம் உம்மன் சாண்டி முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி காலகட்டத்தின் போது முன்மொழியப்பட்டது. இந்தியாவுக்கு என ஆழமான கடற்பகுதியைக் கொண்ட கண்டெய்னர் துறைமுகம் ஏதும் இல்லை. இப்போதைக்கு பெரிய கண்டெய்னர் சரக்கு கப்பல்கள் பரிமாற்ற மையங்களாக செயல்படும் துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
 
போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் ஆர்ச்பிஷப்
 
ஆனால் துறைமுகம் தொடர்பான சர்ச்சைகளும் போராட்டங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்று வருகின்றன.
 
லத்தீன் கத்தோலிக்க திருச்சபையின் ரெவரெண்ட் டாக்டர் தாமஸ் நெட்டோ தலைமையிலான போராட்டத்தில், ஏழு கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. துறைமுகம் கட்டப்படுவதால் நேரிட்டுள்ள கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு தேவை, கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பால் நிலம் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிகமான மறு குடியமர்வு, நிலம் மற்றும் வீடுகளை இழந்தோருக்கு சாத்தியமான திட்டங்களை உருவாக்க வேண்டும் ஆகியவை இந்த ஏழு கோரிக்கைகளில் அடங்கி உள்ளன.
 
லத்தின் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய விவாதம் என்பது துறைமுகப் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களை குறித்தே இருக்கிறது.
 
அதானி நிறுவனத்துக்கு எதிராக திருச்சபையின் வழக்கறிஞர்கள் குழு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் "துறைமுகத் திட்டத்தில் 33 சதவிகிதப் பணிகள் மட்டுமே முடிவடைந்திருக்கின்றன. ஆனால், அதன் தாக்கம் என்பது மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது" என்றும், "ஏழு வரிசைகளில் இருந்த வீடுகள் ஏற்கனவே சேதம் அடைந்துள்ளன. 2016ஆம் ஆண்டில் இருந்து பெண்கள், குழந்தைகள் சிமெண்ட் கிடங்கில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 
தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிட்ட உத்தரவில் பல்வேறு அறிவியல் அமைப்புகளை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு வல்லுநர் குழுவை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், விழிஞ்சம் துறைமுகம் நடவடிக்கை கவுன்சில் எனப்படும் இன்னொரு தன்னார்வ அமைப்பு, போராட்டக்காரர்களுக்கு எதிராக வாதங்களை முன் வைத்துள்ளது. துறைமுக கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தைச் சுற்றி உள்ள சங்குமுகம் கடற்கரை, வலியத்துறை கடற்கரை ஆகிய இரண்டு பிரபலமான கடற்கரைப் பகுதிகளும் அழகான நிலைக்குத் திரும்பியுள்ளன என்று அந்த தன்னார்வ அமைப்பு கூறியுள்ளது.
 
போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுவது போல துறைமுகத்தின் வடக்குப்பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் எந்த அரிப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களின் வாதத்தை கடலே தன்னளவில் நொறுக்கி விட்டது என, பிபிசி இந்தியிடம் தன்னார்வ நிறுவனத்தின் பொறுப்பு கவுன்சிலின் உறுப்பினரான பிரசாந்த் டேவிட் கூறுகிறார்.
 
துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டேவிட், ''ஒட்டு மொத்த திட்டத்தையும் சீர்குலைக்கும் முயற்சி என்பதை தவிர வேறு ஏதும் இல்லை. துறைமுகத்தை சுற்றிலும் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் லத்தீன் கத்தோலிக்க மறைமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது உண்மை அல்ல. எங்களுடைய தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் இதே கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர்கள்தான். துறைமுகத்தை சுற்றியுள்ள உள்ளூர் மக்களில் இந்து, இதர பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் , முஸ்லிம்கள் ஆகியோரும் உள்ளனர்," என்றார்.
 
பிபிசி இந்தியிடம் பேசிய கேரளாவின் துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவாரகோயில், பிற மதத்தினரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சி நடந்ததை அன்றைய தினம் பார்த்தோம். போராட்டக்காரர்களுக்கும், வீடுகள் தாக்கப்பட்ட மக்களுக்கும் இடையே மோதல் ஏதும் ஏற்படாமல் இருப்பதை மறுநாள் உறுதி செய்தோம். இதுபோன்ற விஷயங்களை, மதச்சார்பின்மையை நிலைநிறுத்தும் கேரளா மாநிலத்தில் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இங்கே மத பதற்றத்தை உருவாக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்றார்.
 
திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியபோது, இந்த நடவடிக்கை கவுன்சிலுக்கு மாநில பாஜக அதே போல இந்து அமைப்புகள், பல்வேறு சாதி அமைப்புகளின் ஆதரவுகளும் கிடைத்தன.
 
பிரச்னை அரசியலை கடந்தும் செல்கிறதா?
அதானி துறைமுகம், உண்மையில், அரசியல் கட்சிகளின் அணுகுமுறையில் கூட மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
 
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி எதிர்ப்புத் தெரிவித்தது. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளக அரசின் முழு உரிமை கொண்ட விஐஎஸ்எல் என்ற நிறுவனத்தின் உரிமை பெற்ற நிறுவனமாக அதானி விழிஞ்சம் துறைமுகம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கேரள அரசு தேர்வு செய்தது. 2016ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபோது இந்த திட்டத்தின் கட்டுமானப்பணிகளை நிறுத்தவில்லை.
 
இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கின. பாறைக்கற்கள் பற்றாக்குறை, ஒக்கி, பூவேரி புயல்கள் போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் கோவிட் 19 தாக்கம் ஆகியவை உட்பட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தாமதமானது. கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் முடிவடைந்து திட்டத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கியபோது, லத்தீன் கத்தோலிக்க திருச்சபை தலைமையிலான போராட்டங்கள் தொடங்கின.
 
துறைமுகத்தின் கட்டுமானத்துக்கு ஆதரவு தரும் இந்த விஷயத்தில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது இதில் வெளிப்பட்ட விசித்திரமான அம்சமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட இப்போது வரை இந்த விஷயத்தில் மெளனம் காத்து வருகிறது. இது குறித்து அது வெளியிட்ட ஓர் அறிக்கையில், "வளர்ச்சி திட்டங்களை தடம் புரளச் செய்து மாநிலத்தை சீர்குலைக்க செய்யும் வகையில் மக்களின் மனங்களில் பீதியை உருவாக்கி குறிப்பிட்ட சிலரால் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது," என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
"போராட்டக்காரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் திட்டத்தின் கட்டுமானம் நடைபெறும் பகுதியின் நுழைவாயிலை தடுத்தனர். அப்போது போலீசார் வெறுமனே அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று நாட்கள் கழித்து போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு, திட்டத்தின் உயர் பாதுகாப்பு மண்டல பகுதிக்குள் நுழைந்தனர். முக்கிய நுழைவாயிலை சேதப்படுத்தினர். சொத்துக்கும் சேதம் விளைவித்தனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதானி விழிஞ்சம் துறைமுகம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
 
"உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பாறைக்கற்களை ஏற்றி வரும் லாரிகள் துறைமுகத்தின் வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், அடுத்த நாள் சனிக்கிழமை மட்டுமே லாரிகள் வந்தன. அப்போது துறைமுகத்தின் கட்டுமானப்பணிக்கு ஆதரவு தெரிவித்து பெரும் அளவிலான மக்கள் கூடியிருந்தனர். அப்போது இரண்டு குழுக்களுக்கு இடையே நுழைவுப் பகுதியில் மோதல் ஏற்பட்டது," என தாமஸ் கூறினார்.
 
"செல்டன் என்று அழைக்கப்பட்ட ஒரு நபர் கடலில் இருந்தபோதும், படகை இழந்து விட்டு அவர் தவித்துக் கொண்டிருந்தபோதும் அந்த நபரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட செல்டன் குறித்து அறிந்து கொள்வதற்காக நான்கு பேர் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். விரைவிலேயே சிலர் போலீஸ் ஸ்டேஷன் மீது கற்களை வீசி தாக்கினர். பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷன் பின்பகுதியில் இருந்தே கல்வீச்சு நடைபெற்றது, " என தாமஸ் குற்றம் சாட்டுகிறார்.
 
இது குறித்து கருத்துக்கேட்க போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள பல முறை முயன்றபோதும் அவை பலனளிக்கவில்லை.
 
ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்களால் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்ட நான்கு பேரை போலீசார் விடுவித்துள்ளனர்.