முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > நட்பு தினம்
 
நட்பின் இலக்கணம்!
க. திருப்பதி
Webdunia
'உடுக்கை இழநதவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.

எரிமலை இல்லாத, ஆறுகள் இல்லாத ஏன் திரையரங்குகள் கூட இல்லாத நாடுகள் இருக்கின்றன. ஆனால், நண்பர்கள் இல்லாத நாடுகள் என்று ஏதும் இல்லை.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த நட்பினை, நட்பின் உயர்வினை கொண்டாட, கூடி மகிழ அன்பினைப் பரிமாறி ஆரவாரம் செய்ய எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமே 'நண்பர்கள் தினம்'.

வயது வரம்பு இல்லாமல், பாலினம் பாராமல் பலராலும் பருகப்படுவதும், பாராட்டப்படுவதும் தொட்டுத் தொடரும் இந்த தோழமைதான்.

ஆகஸ்ட் மாதத்தின் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக் கிழமையும் நட்பு போற்றும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது.

காதலர் தினத்தை கணிசமாக எதிர்க்கும் நம கலாச்சாரக் காவலர்கள், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை.

நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. பேசிப் பழகி பிரிந்து வருந்த வேண்டும் என்றும் இல்லை. இதனை நம் புராண கதைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆம்! நமக்கெல்லாம் தெரிந்த உதாரணம் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பைக் கூறலாம். அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை என்றாலும் நட்பின் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டு எல்லோருக்கும் பாடாமாய் அமைந்தார்கள்.

ஒருவரின் புகழ் பற்றி மற்றொருவர் அறிந்து நட்பு பாராட்டினார்கள். தனது நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிரிழப்பதைக் கேள்விப்பட்டு தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் பிசிராந்தையார்.
1| 2