காதலர்களின் தலங்களை ஆக்ரமித்த விபச்சாரம்
|
காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் பல்வேறு வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
பொதுவாக ஒரு சில இடங்களில் காதலர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதுபோன்ற இடங்கள் எப்போதும் இளமையாக இருக்கும் என்பதும் ஒரு உண்மையான விஷயம்தான்.
சரி காதலர்கள் அதிகமாக சந்திக்கும் இடங்கள் எவை எவை என்று விரல் விட்டு சொல்லிவிட முடியும். அப்படித்தானே...
அவை பெரும்பாலும் பூங்காக்கள், கடற்கரை, திரையரங்குகள், பொழுதுபோக்குத் தலங்கள், நவீன உணவு அரங்கங்கள், ஒரு சில கோயில்கள் போன்றவற்றில் பெரும்பாலான கூட்டம் காதலர் கூட்டமாகத்தான் இருக்கும்.
அதிலும் குறிப்பாக பூங்காக்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம், உடல் பருமனைக் குறைப்பதற்காக நடந்து செல்பவர்கள், தங்களது பேரன், பேத்திகளை விளையாடக் கொண்டு வரும் வயதில் மூத்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் காதலர்களாகத்தான் இருப்பார்கள்.
ஆனால் தற்போது சில பூங்காக்களில் ஒரு சில முறைகேடுகள் நடந்துள்ளால், தற்போது பூங்காக்களுக்கு வரும் இளம் ஜோடிகளிடம் காவல்துறையின் கெடுபிடி அதிகரித்துள்ளது.
ஒரு பூங்காவில் பெண்ணிற்கு மது கொடுத்து கற்பழிக்க முயற்சி, மேலும் ஒரு பூங்காவில் தற்கொலை முயற்சிகள் என
பூங்காவின் அமைதியான சூழலை பாதிக்கும் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட.. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்தது காவல்துறை.
இதில் பலியாவது என்னவோ காதலர்கள்தான். மாலை நேரத்தை இனிமையாக கழிக்கலாம் என்று வந்தவர்களை ஊர், பேர், தெரு, பெற்றவர்களின் பெயர் என விவரம் கேட்டு விழிபிதுங்க வைத்துவிட்டனர்.
இதனால் பூங்காக்களை பார்த்தாலே காவல்நிலையம் போல அலறுகிறது காதலர் பட்சிகள்.
|
கடற்கரைக்குப் போகாத காதல் ஜோடி உண்டா என்று கேட்கும் அளவிற்கு கடற்கரை ஒரு சிறந்த காதலர் தலமாக இருந்தது.
ஆனால் அங்கும் தற்போது விபச்சாரக் கும்பலின் அட்டூழியம் தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே ஜோடியாக உட்கார்ந்து கொண்டு ஒரு சிலர் செய்யும் சேட்டைகளைக் கண்டு அங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் அங்கும் கெடுபிடி. ஆனால் கடற்கரையில் தற்போதும் விபச்சாரத்தின் அத்துமீறல் குறையவில்லை ஆனால் காதலர்களின் எண்ணிக்கை சற்றேறக் குறைய குறைந்து விட்டது என்றேக் கூறலாம்.
திரையரங்குகளிலும் இதே நிலைதான். புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களிலும் விபச்சாரத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தற்போதெல்லாம் ஜோடிகளைப் பார்த்து, இவர்கள் காதலர்கள்தானா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
பேருந்து நிறுத்தம், கோயில்கள் சின்னஞ்சிறு சந்துக்கள், உணவகங்களில் மட்டுமே சந்தித்து சில மணி நேரங்கள் பேசி முடிக்கும் நிலைக்கு காதலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு வரப்பிரசாதம் என்னவெனில் செல்பேசிகள்தான். குறைந்தபட்சம் பேசிக்கொள்ளும் வாய்ப்பையாவது இது அளிப்பதுதான் காதலர்களுக்கான ஒரே மகிழ்ச்சி.
