காலையில் ருசியான சிற்றுண்டி, மதியம் வயிராற நல்ல சாப்பாடு, இரவில் ரசத்துடன் முடிக்கும் அளவான உணவு என்று நாளுக்கு மூன்று வேளை உட்கொண்டாலும், அது பசிக்கும், உடலிற்கும்தான்.
ஆனால் நாள் முழுவதும் நாம் பணியாற்ற, வரும் பணி அனைத்தையும் தொய்வடையாமல் செய்து முடிக்க கட்டாயம் ஒன்று தேவைப்படுகிறது.
நம் உள்ளத்திற்கு உற்சாகம் அளிக்கவும், மூளைக்கும் உத்வேகமளிக்கவும்... ஏதாவது பானங்கள்.
“என்னதான் ருசியான சாப்பாடு சாப்பிட்டாலும்... கடைசியில ஒரு கப்... குடிச்சாதாம்பா எனக்கு சாப்பிட்டா மாதிரி இருக்கும்” என்று பலர் கூறக் கேட்டுள்ளோம்.
விருந்து சாப்பிட்டப் பின்னர் சிலர், சற்று தூரம் நடந்து சென்று ஒரு கப் தேநீர் அருந்திவிட்டு வருவதைப் பார்த்துள்ளோம். இப்படிப்பட்ட சூடான அல்லது குளிரான பானங்களை விரும்பி அருந்தும் ஒரு வழக்கம் இன, தேச எல்லைக்களைக் கடந்து உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.
இதற்குக் காரணமென்ன? ஆய்வு செய்துள்ளார்களே. மனதிற்கும், மூளைக்கும் உற்சாகமும், உத்வேகமும் அளிக்கின்ற பானங்களை ஆங்கிலத்தில் stimuli என்கின்றனர்... அதாவது நமது மென்னுணர்வுகளை தூண்டி விடுபவை.
அதனால்தான், உணவிற்குப் பிறகு ஏதாவது ஒரு பானத்தை ருசிக்கும் வழக்கம் உள்ளது.
அந்த பானத்தை குடித்து முடித்தவுடன் தனக்காக காத்திருப்பவரிடம் வந்து, “இப்ப சொல்லு உன் பிரச்சனைய” என்று புன்னகையுடன் ஆரம்பிப்பவர்கள் ஏராளம்.
“நான் ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கிறேன் தெரியுமா?” என்றும் “ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கப் காஃபி குடிக்கலைனா எனக்கு மண்டை வெடிச்சுடும் மாதிரி இருக்கும்பா” என்றும் கூற கேட்டிருக்கிறோம்.
என்னதான் நல்லது கெட்டது கதை சொன்னாலும்... இவர்கள் காதில் அது ஏறாது, தொடர்ந்து வற்புறுத்தினால் கெட்டது கதை... அப்படியா என்று கேட்டுக்கொண்டே நம்மை வெறுப்பேற்றுவதுபோல ஒரு கப் வரவழைத்து... நம்மை அடிக்காமல் அடிப்பார்கள்.
இப்படி மனிதனின் அன்றாட வாழ்வில் ஒரு இணைபிரியா தோழனாகப் பானங்கள் தொடர்வதற்கு வெறும் பழக்கம்தான் காரணமா?
அப்படிச் சொல்லலாம். ஆனால் முழு உண்மை அதுவல்ல. இந்த பானங்களில் இயற்கை ஒளித்து வைத்து வழங்கும் மனமும், ருசியுமமே பெரும் காரணங்களாகும்.
உதாரணத்திற்கு காஃபியை எடுத்துக் கொள்வோம், எத்தனை வகை, எத்தனை விதமான சுவை. நல்ல காஃபியை ருசிப்பதற்கென்றே சிலர் ஒரு குறிப்பிட்ட சிற்றுண்டி சாலைக்குப் படையெடுப்பதைப் பார்க்கின்றோம்.
தான் வளர்ந்த மண்ணின் சுவையுடனும், பறித்து பொடியாக்கிக் கையாளப்பட்ட முறையினால் பெறும் மனத்துடனும் நம் உள்ளத்தை வெகுவாக ஈர்ப்பது காஃபிதானே?
கர்நாடக மாநிலம் கூர்க் மலைச் சரிவுகளில் இதமான தட்ப வெப்ப நிலைகளில் பல ஆயிரம் சதுர மைல் பரப்பில் பசுமையாய் வளர்ந்து செழித்த காஃபி கொட்டைக்கூறும் தன் கதையை கேட்போமா?
|