ஆஸ்ட்ரேலியா சென்ற பிறகு தமிழ் சார்ந்த தாங்கள் செய்த மற்றப் பணிகள் என்ன?
ஆஸ்ட்ரேலியாவில் ஆதி குடியின மக்கள் இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பது நான் அறிந்தது. ஆனால், அவர்களுக்கும், அங்கு வாழும் மற்ற இனத்தவருக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இல்லை. மற்ற இனத்தவருக்கும் அந்த ஆதிகுடியினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தக் கூடிய முயற்சிகளில் ஈடுபட்டேன்.
அவர்களிடையே வழங்கி வந்த இரண்டு கதைகளை தமிழில் மொழி பெயர்த்து புத்தகங்களாக வெளியிட்டேன்.
கங்காருவிற்கு வால் நீண்டது ஏன்? என்று ஒரு புத்தகம், கங்காரு தாவித்தாவி ஓடுவது ஏன்? என்று மற்றொரு புத்தகம் நான் வெளியிட்டேன்.
இப்படிப்பட்ட பணிகளால் அங்கு வாழும் இன மக்களிடையே நெருங்கிய ஒட்டுறவு ஏற்பட்டதா?
இல்லை. அப்படி ஏதும் ஏற்படவில்லை.
அந்த ஆதி குடியினர் பேசும் மொழி என்ன?
அவர்களிடையே 500 மொழிகள் பேசப்படுகிறது. சிலத் தனி மனிதர்கள் பேசக்கூடிய மொழியெல்லாம் அங்கு உண்டு. அதுதான் ஆச்சரியம்.
ஆனால், எல்லா மொழி, இனத்தவருக்கும் ஆஸ்ட்ரேலிய அரசு உதவிகளை செய்கிறது. உதாரணத்திற்கு எனக்கு பிறந்த நாட்டில் ஓய்வூதியம் இல்லை. ஆனால் ஆஸ்ட்ரேலிய அரசு எனக்கு ஓய்வூதியம் அளிக்கிறது. இப்படிப் பல உதவிகளை அந்நாட்டு அரசு அளிக்கிறது.
ஆஸ்ட்ரேலியாவில் வாழும் குறிப்பாக வெள்ளையின மக்கள் மற்ற மொழி, இனத்தவருடன் எப்படி பழகுகிறார்கள்?
வெள்ளையர் என்று சொன்னால் அங்கு ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய மொழிகள் பேசக்கூடியவர்கள் அனைவரும் அங்கு வெள்ளையர்கள்தான். முன்பு ஆஸ்ட்ரேலியப் பிரதமராக இருந்தவர் ஒரு ஐரீஷ்காரர். இப்பொழுது இருக்கும் ஹோவர்ட் ஆங்கிலேயர். இப்படிப்பலரும் வெள்ளையர்கள்தான் அங்கு.
அங்கு வாழும் இந்தியர்கள், இலங்கையில் இருந்து சென்றவர்கள் போன்ற கருப்பின மக்களிடம் அவர்கள் எப்படி பழகுகிறார்கள்?
அங்கும் இன வெறி இருக்கிறது என்று கூறுகிறார்கள், ஆனால் நான் கண்டவரை அவ்வாறு ஏதும் இல்லை. நன்றாகவேப் பழகுகிறார்கள்.
சிலர் தாங்கள் நடந்து கொள்ளும் முறையால் இப்படிப்பட்ட வேறுபாடுகளை ஏற்படுத்தக் கூடும்.
அவர்கள் முரட்டுத்தனமானவர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.
அப்படி இல்லை. மென்மையாகத்தான் பழகுகிறார்கள்.
எல்லா மக்களும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உண்டு. ஆனால் ஒருவருடைய வாழ்க்கையில் மற்றொருவருடைய தலையீடு இருக்கக் கூடாது.
உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை வந்தால் நாம் வீட்டிற்கு வெளியே அடுப்பை வைத்து பொங்கலிடுவோம். அங்கு அது கூடாது. வீட்டிற்குள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அடுத்த வீட்டுக்காரருக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது. தொந்தரவு இருந்தால் போலிஸ் வந்து விடும்.
அதேப்போல, மக்கள் வசிக்காத பகுதிகளில் தான் கோயில் போன்ற வழிபாடு தலங்கள் இருக்கும். நாமெல்லாம் கோயிலுக்கு அருகே தான் குடியிருந்து பழக்கம். ஆனால் அங்கு நிறைய மக்கள் வந்து செல்லும் இடங்கள் தனியாக இருக்கும்.
மற்ற இன மக்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இப்படி தனித்து அமைத்து விடுகிறார்கள்.
இப்பொழுது என்ன காரணத்திற்காக சென்னை வந்துள்ளீர்கள்?
நான் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருவதுண்டு. இங்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் தங்கி ஒரு புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்டு விட்டுச் செல்வேன்.
இப்படி பத்து ஆண்டுகளாக வந்து ஒவ்வொரு முறையும் ஒரு நூலை வெளியிட்டுவிட்டு செல்வேன். இந்த முறை ஆஸ்ட்ரேலிய தமிழர்களைப் பற்றிய இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளேன். தமிழக அமைச்சர் பொன்முடிதான் வெளியிட்டார்.
|