அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஃப்ரிமாண்ட்டில் வாசம் செய்யும் குமார் குமரப்பன் அவர்களின் காணல் இடம்பெறுகிறது.
நம் தமிழ் மொழியை அயல் மண்ணாம் அமெரிக்க மண்ணில் அறிவுசார் பல்கலைக்கழகம் ஒன்று கற்றுக்கொடுக்கிறது! அந்தப்பல்கலைக்கழகம் பெர்க்கிலி பல்கலைக்கழகம்!
கலிஃபோர்னியாவில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்க முன்னின்று முயற்சி கண்டவர்களுள் கலிபோர்னியாவைச் சேர்ந்த நா.குமார் குமரப்பன் அவர்களும் ஒருவர்!
தமிழகத்தில் B.E.(Electronics & Commn); USல் M.S.(Electrical) படித்தவர். 25 ஆண்டுகளுக்கு மேலாக கலிபோர்னியாவை (சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி) இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருபவர். ரிக்கோ நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார். (Ricoh Corporationல், Director of Engineering)
எந்த ஒரு சூழலிலும் மனித நேயத்துடனும், ஆகாயத்தைப் பார்த்து அற வாழ்விற்கு தடம் போட முயலாமல் அக்கம் பக்கத்தின் சமூகப் பிரச்சனைகளில் அக்கரை கொள்கிறவராகத் திகழ்கிறார். இதனால் பொதுநலப் பொறுப்புகள் பல இவரைத் தேடி வந்து சேர்ந்துகொண்டது!
இவரின் தமிழ் வளர்ப்பு முயற்சிகள்:- 1980 - சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் (San Francisco Bay Area Tamil Manram) நிறுவிய குழுவில் ஒருவர். 1991 - 1997: UC Berkeley Tamil Chair - நிறுவிய நிதி திரட்டும் குழுவிற்குத் தலைவர்.
2002 - உத்தமம் (INFITT) சார்பாக, சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த தமிழ் இணைய மாநாட்டிற்குத் (TI 2002) துணைத் தலைவர். உத்தமத்தின் (INFITT) தற்சமய பொருளாளர்.
கலிபோர்னியா தமிழ் கழகத்தின் (CTA - California Tamil Academy)துணைத் தலைவர் - இது கலிபோர்னியா தமிழ் அமெரிக்கர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் முயற்சி - தற்சமயம் கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் இங்கு தமிழ் கற்கின்றார்கள்.
ஈழத் தமிழர்களின் துயரில் பங்கு கொண்டு, இங்குள்ள TNC (Tamils of Northern California) அமைப்பின் மூலம் சிறு சிறு முயற்சிகள் மூலம் உதவ முயலும் மனித நேயம் என்ற இவரின் தொண்டு கரைகாணா கடலாய்த் தொடர்கிறது.
இனிமை, எளிமை, நேர்மை என்ற பண்புகளில் மிளிரும் நா.குமார் குமரப்பன் அவர்களின் நேர்காணல் -
தமிழர்களே தமிழர்களோடு தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் உரையாடுது குறித்துத் தங்கள் கருத்து என்ன? குமார் குமரப்பன் : இதற்குரிய பதில் சற்று சிக்கலானது . ஆங்கில அறிவு இன்றைய நடைமுறைக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது என்பது உண்மை. இருப்பினும் தமிழகத்திலேயே வாழும், ஆங்கிலம் அவ்வளவு தேவையில்லாத , சராசரி தமிழன் கூட தம் ஆங்கில அறிவை வெகுவாக வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு ஆங்கிலத்திலேயே பேச முயற்சிக்கின்றான்.
இங்குள்ளவர்களுக்கு வேலையிலும் மற்ற பல சூழல்களிலும் தமிழ் இல்லாததால், சிலருக்கு பல வருடங்களில், தமிழிலேயே பேசுவது கடினமாகிப் போகின்றது. மற்றும் பலருக்கோ ஆங்கிலத்தில் உரையாடுவது ஒரு வரட்டு கௌரவமாகிவிட்டது. ஆக மொத்தம் பல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் வேற்று மொழிச் சொற்கள் உபயோகிப்பது இயல்பாகிக்கொண்டிருப்பது நிதர்சனம்.
இந்த சாபக்கேடு தமிழ் மொழிக்கு மட்டுமே என்று கூற முடியாது. இருப்பினும் நம் சமூகத்தில் இது சற்று அதிகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது . இந்த போக்கை மாற்ற நம் சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களுக்கும் , நம் வெகுசன ஊடகங்களுக்கும் , இங்கே ஒரு பொறுப்பு உண்டு . ஆனால் அவர்களோ 'பொல்லாத சில பேர்க்கு இது நாகரீகம், புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்' என்ற கவிஞனின் வாக்கை மெய்பிப்பதுபோல், தம் நடைமுறைகளை மேற்கொள்கின்றார்கள். அதாவது தமக்கே உரித்தான செல்வாக்கை பயன்படுத்தி இந்தச் சாய்வினை நிறுத்த /மாற்ற முயற்சிக்காமல் அதை வலுப்படுத்தவே முனைகின்றார்கள். இந்த வலையில் விழாமல், தமிழனின் மனப்போக்கு மாற வேண்டுமென்றால் தமிழன் பொருளாதரத்தில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும். தனது மொழி மீதும் இனத்தின் மீதும் நியாயமான பற்றுக் கொண்டு பெருமிதத்தோடு வாழ நம் மொத்த சமூகத்தின் பொருளாதர மேன்மை பெரிதும் உதவும் என்றே நம்புகின்றேன்.
|