ரி.கி : அப்படியானால் பெக்கட்? ஜாய்சின் மிக நெருங்கிய ஐரிஷ் சீடர் அவர்தானே? அவரும் கூட உங்களைப் போலவே புனைவு மீது மோகம் (Obsession) கொண்டவர்தானே. புனைவு என்பது அவருக்கும் சுயமாகக் கூர்ந்தாயும் மனத்தின் புதிர்வழிதானே (Self-scrutinising labyrinth of the mind); புனைவு குறித்து நித்யமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நையாண்டி போலிதானே (Parody of itself).
ஜோ : சாமுவேல் பெக்கட் அலுப்பானவர். நான் அவரது Waiting for Godot பார்த்தேன். அது மட்டுமே எனக்குப் போதுமானதாகப்பட்டது. மோசமான படைப்பு அது. கோடாட் எப்போதுமே வரப்போவதில்லை என்கிற போது அவருக்காக நான் எதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும்? அலுப்புத் தரக்கூடிய விசயம் இது. அதற்குப் பிறகு அவரது நாவல்களைப் படிக்கும் ஆர்வம் எழவேயில்லை.
ரி.கி : உங்களது படைப்புகள் மெய்ப்பொருளியல் சங்கேதங்களையும் (Metaphysical Allusions) அதன் பிரதிபலிப்புகளையும் கொண்டுள்ளன. உங்களுக்கும் தத்துவத்திற்குமான தொடர்பு என்ன?
ஜோ : என்னைப் பொருத்தளவில் ஷோபனார் (Schopenhauer) தான் தலைசிறந்த தத்துவவாதி. கருத்துக்களில் புனைவிற்குள்ள வலிமையை அவர் அறிந்திருந்தார். இத்திட நம்பிக்கையை ஷா-விடமும் காணமுடிகிறது. எழுத்தாளன், சிந்தனையாளனுக்கு இடையிலான பொய்யான இடைவெளியை ஷோபனாரும். ஷாவும் வெட்ட வெளிச்சமாக்கினார்கள். இருவருமே சிறந்த எழுத்தாளர்கள். சிந்தனையாளர்கள். என்னை மிகவும் ஈர்த்த இன்னொரு தத்துவவியலாளர் ஜார்ஜ் பெர்க்லி-இன்னுமொரு ஐரிஷ்காரர். மெய்ப்பொருளியலும் கவிதையைப் போனறே படைப்பு மனத்தின் செயல்பாடுதான் என்பதைப் பெர்க்லி அறிந்திருந்தார். பிற தத்துவவியலாளர்களைப் போல் அவர் கருத்துக்களின் அடிமையாகி விடவில்லை. தத்துவார்த்த தர்க்க முறைமையும் கவிதையின் புராணிகமயமாக்கல் செயல்பாடும் பிரிக்கமுடியாதபடி ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. ஒன்று மற்றதற்குச் சிறப்புச் சேர்ப்பவை என்பதை பிளாட்டோ, சாக்ரடீசுக்கு முந்தைய சிந்தனையாளர்கள் அறிந்திருந்தனர். பிளாட்டோ இந்த இரண்டு செயல்களையும் செய்யவல்லவராயிருந்தார். பிளாட்டோவிற்குப் பின்னால் மேற்கத்திய உலகம் இச்செயல்பாட்டை ஏற்க மறுத்து விட்டதாகவே தெரிகிறது. அவர்கள் உரத்த குரலில், நாங்கள் கனவு காண்போம் அல்லது நம்பிக்கையின் ஆதாரத் தேடலில் ஈடுபடுவோம். அதற்கான வாதங்களை முன் வைப்போம் அலலது உருவகங்களின் துணை நாடுவோம் என்று கூறிவிட்டதாகவே தெரிகிறது. ஆனால் உண்மை என்னவெனில் இந்த இரண்டையும் ஒரு சேர நாம் கையாள்கிறோம். பல கட்டிறுக்கமான, அகநிலை உணர்வு பெற்ற (Hermetic and mystical thinkers) சிந்தனையாளர்கள் இந்த எதிர் நிறுத்தலை எதிர்த்து வந்துள்ளனர்.
பெர்க்லி, ஷெல்லிங், ஷோபனாரும், பிராட்லி போன்றோரிடம் நவீன கருத்து முதல் வாதங்கள் (Modern Idealism) உருவான போது மனத்தின் படைப்பாக்கம், உருவாக்கத்திறன் மீது தத்துவவியலாளர்களின் சார்பை மீண்டும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது. (பிராட்லியின் " Appearance and Reality" என்ற புத்தகத்தின் முன்னுரை என்னைக் குறிப்பிட்டிருந்தது. நான் ஒருதீவிரமான சிந்தனையாளராக காட்டப்பட்டிருந்தேன்.)
ரி.கி : பெர்க்லியின் மெய்ப்பொருளியல் தத்துவத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் பிறந்தது எப்படி?
ஜோ : என் தந்தை உளவியல் துறைப் பேராசிரியர். எனக்குச் சரியாக எழுதப்படிக்கத் தெரியாத போதே சிந்திக்கக் கற்றுக் கொடுக்கலானார். என் பத்தாவது வயதில் பெர்க்லியின் தத்துவத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார், இரவுச் சாப்பாட்டிற்கு பின் எனக்குத் தத்துவப்பாடம் நடத்துவார். பெர்க்லியின் கருத்துமுதல்வாத மெய்ப்பொருளியலை எனக்கு முதன்முதலில் எப்படி அறிமுகப்படுத்தினார் என்பது நன்றாக நினைவிருக்கிறது. குறிப்பாக, பொருண்மையான அல்லது அனுபவ ரீதியான உலகமானது படைப்பு மனத்தின் கண்டுபிடிப்பே என்பதையும் இருத்தல் என்பது உணரப்படவேண்டிய ஒன்றே என்கிற பெர்க்லியின் கோட்பாடுகளையும் எப்படி அறிமுகப்படுத்தினார் என்பது இன்றளவும் நினைவில் உள்ளது.
அது மதிய வேளை. சாப்பிட்ட பிறகு ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அதன் நிறம் என்னவென்று என்னிடம் கேட்டார். நான் "ஆரஞ்சு" என்றேன். இதன் நிறம் இந்தப் பழத்திலேயே உள்ளதா அல்லது அதை நீ அப்படி உணர்ந்ததின் விளைவா" என்றார். "இந்த ஆரஞ்சின் இனிப்புத் தன்மை அதனுள்ளேயே உள்ள ஒன்றா? அல்லது உன் நாவின் சுவையுணர்வு தான் அதனை இனிப்புச்சுவை உள்ளதாகத்தோன்றச் செய்கிறதா?" என்றார். இந்நிகழ்ச்சி புறவுலகென்பது நம் கண்டுணர்வின் விளைவு அல்லது இருப்பதான கற்பிதமே என்ற புரிய புரிதலுக்கு இட்டுச் சென்றது. நம் மனத்திற்கு வெளியே சுதந்திரமான இருப்பு அதற்கில்லை என்பதையும் அறிந்தேன். அன்று முதல் யதார்த்தமும் புனைவும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன என்றும் நமது கருத்தாக்கங்களும் கூட படைப்பாக்கத்திறனால் உருவாக்கப்பட்ட புனைவுகளே என்றும் அறிந்து கொள்ளலானேன். மெய்ப்பொருளியல், மதம், இலக்கியம் ஆகியவை ஒரு பொதுவான மூலாதாரத்தைக் கொண்டவை என்பதை நான் எப்போதுமே நம்பி வருகின்றேன்.
|