முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  பேட்டிகள்
 
கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்
`நாமே சாக்சன், கெல்டிக், டேன்' என லார்ட் டென்னிசன் நினைவூட்டியதைப் போல ஆங்கிலேயர்களும் கூட பல இனங்களின் கலப்பேயாகும். சுத்தமான, கலப்பற்ற இனம் அல்லது தேசியம் என்று ஒன்று இல்லை. அப்படி ஒன்று இருக்க முடியுமானால் அதன் எல்லைகளும் கற்பனைகளால் தாண்டப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கும். ஆக, தேசியமும் இலக்கியமும் இயல்பாகவே எதிரெதிரானவைதாம்.

லத்தீன் - அமெரிக்கஅல்லது ஹிஸ்பானிய - அமெரிக்க என்று கருதப்படக் கூடிய குறிப்பாக அர்ஜெண்டின கலாச்சாரம் என்று ஒன்று இருப்பதாக நான் நம்பவில்லை. உண்மையான அமெரிக்கர்கள் இந்தியர்கள்தான்; ஏனையோர் அனைவரும் ஐரோப்பியர்களே. எனவே நான் என்னை சொந்தநாடு கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளனாக கருதிக் கொள்ளவே விரும்புகின்றேன். நான் ஹிஸ்பானியனல்ல; அமெரிக்கனல்ல; ஹிஸ்பானிய அமெரிக்கனும் அல்ல. மாறாக, நான் சொந்த நாடு கடந்து வாழும் ஒரு ஐரோப்பியன். அவ்வளவே.

சி.ஹி.: டி.எஸ். எலியட் "ஐரோப்பிய முழுமனம்" (Whole mind of Europe) பற்றிப் பேசியுள்ளார். ஸ்பானிய மொழியின் ஊடான பயணத்தில் தாங்களும் இந்த வகையான முழுமனத்தின் ஏதோவொரு கூற்றை வரித்துக் கொண்டிருப்பதாக உணர்கின்றீர்களா?

ஜோ : அர்ஜெண்டினாவில் நாங்கள் எந்தவொரு தனிப்பட்ட ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மீதும் முற்றுமுழுதான பற்றுறுதியைக் கொண்டிருக்கவில்லை. நான் ஏற்கனவே கூறியதைப்போல, ஐரோப்பாவின் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், அதேபோல "ஐரோப்பிய முழுமனம்" என்றொன்று இருக்குமேயானால் அதிலிருந்தும் எங்களால் தெரிந்தெடுத்துக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் எங்களுக்கும் ஐரோப்பாவிற்குமான தூரம் அதிகமிருப்பதால், ஐரோப்பாவையும் தாண்டி ஆசியாவிலும் ஏனைய கலாச்சாரங்களிலும் தேடிப்பார்க்கும் கலாச்சாரம் அல்லது கற்பனைச் சுதந்திரம் எங்களுக்கு உண்டு.

ரி.கி. : தூரக்கிழக்கில், புத்தமதத்தில் காணக்கிடக்கும் மெய்யியல்கோட்பாடு உங்கள் புனைவுகளில் அடிக்கடி முன்வைக்க முயலும்போது நீங்கள் செய்வதைப் போல...

ஜோ : ஒருமுகப்பட்ட "தேசிய" கலாச்சாரம் சாராதிருப்பது என்பது அநேகமாக வரட்சியல்ல. மாறாக அதுசெழுமையே. இந்த அர்த்தத்தில் பியூனஸ் அயர்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சர்வதேசிய எழுத்தாளன் நான். ஏற்கனவே கூறியதைப் போல எனது மூதாதையர்கள் வெவ்வேறு தேச இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள். எனவே எனது இளம்பிராயம் முழுவதும் ஐரோப்பாவில் பயணம் செய்வதிலேயே கழிந்தது. அதிலும் குறிப்பாக ஜெனீவா, மாட்ரிட் மற்றும் லண்டனில் நான் பல்வேறு புதிய மொழிகளான ஜெர்மன், ஆங்கிலம், லத்தீன் முதலானவற்றைக் கற்றேன். இந்தப் பன்னாட்டுப் பயிலனுபவம் அழகான பொம்மைகளுடன் விளையாடுவதைப் போன்று வார்த்தைகளுடன் விளையாடுவதற்கான திறனைக் கொடுத்தது; பிரௌனிங் கூறுவதைப் போல 'மாபெரும் மொழி விளையாட்டிற்குள் நுழைவதற்கான" வழியை வகுத்தக் கொடுத்தது.

ரி.கி.: ஜாய்சைத் தவிர, நீங்கள் மதிக்கின்ற குறிப்பிடும்படியான ஐரிஷ் எழுத்தாளர்கள் சிலரைக் கூறுங்களேன்.

ஜோ. : நான் சிறுவனாக இருந்தபோது பியூனஸ் அயர்சில் ஜார்ஜ் பெர்னாட்ஷா - வின் Quintessence of Ibsensism படித்தேன். அப்புத்தகம் என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. அதன் விளைவாக அவரது அனைத்து நாடகங்களையும் கட்டுரைகளையும் வாசித்து முடித்தேன். அவற்றில் ஆழ்ந்த தத்துவ விசாரமுள்ள எழுத்தாளனை, மனத்திட்பம் மற்றும் மனத்தின் உருத்தோற்ற மாற்றம் செய்யவல்ல (Transfiguring power of the will and of the mind) திறன் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளனைக் கண்டேன். அயர்லாந்து மக்களுக்கே உரிய குறும்புத்தனத்துடன் கூடிய வேடிக்கையுணர்வை நகைச்சுவை உணர்வை ஷா கைவரப் பெற்றிருந்தார். அதேபோல் மேம்போக்கானவற்றை, நகைச்சுவையானவற்றை அறிவார்ந்த ஆழத்துடன் கலந்து எழுதும் அரிய ஆற்றல் பெற்ற இன்னொரு எழுத்தாளர் ஆஸ்கார் ஓயில்ட். அவர் சில அலங்காரமான பக்கங்களையே (Purple Passages) எழுதியுள்ள போதிலும் அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானவை என்றே நான் நம்புகிறேன். . . . .

ரி.கி : ஆஸ்கார் ஓயில்ட் ஒரு முறை "கலையில் உண்மை என்பது அதன் முரணும் உண்மை என்பதே" (Truth is art is that whose contrary is also true) என்றார்.

ஜோ : ஆம். அதைத்தான் நான் வேடிக்கை உண்மை (Comic Truth) என்றேன். ஆம், யதார்த்தத்தின் சூழல் மற்றும் முரண்பட்ட பதிவுகளை அனுமதிக்கும் உண்மை. அதனால்தான் நான் ஓயில்ட் எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் உண்மை என்றேன். நானும் வேடிக்கை உண்மையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒரு இளைஞனாக இலக்கிய முயற்சியில் இறங்கிய போது ஆஸ்கார் ஓயில்டின் தேவதைக் கதையொன்றை மொழியாக்கம் செய்தது தற்செயலாக நடந்ததாக நான் எண்ணவில்லை. எனது இளம் மனத்தில் கற்பனைத் தீ மூட்டிய இன்னொரு ஐரிஷ் எழுத்தாளர் ஜார்ஜ்மூர் ஆவார். தெருக்களில் கேட்க நேர்ந்த பேச்சினூடான நொடிக்கதைகளை உருமாற்றம் செய்து ஒரு புனைவான வரிசையில் கொடுப்பதன் மூலம் ஒரு புதுவகையான புத்தகத்தை, ஒரு புதுவையான புனைவு எழுத்து முறையை மூர் உருவாக்கினார். நான் அவரிடமிருந்தும் கற்றுக் கொண்டேன்.

1| 2| 3
மேலும்
ஜோர்ஜ் லூயி போர்ஹே
பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்