முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  பேட்டிகள்
 
கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்
Webdunia
ஜாய்ஸ், மொழி மீது கொண்டுள்ள மோகம் / லயிப்பு காரணமாக அவரது எழுத்தை மொழியாக்கம் செய்வது - அதிலும் குறிப்பாக ஸ்பானிய மொழியில் - சிரமமானதை மட்டுமல்லாமல் இயலாததாகவும் ஆகிவிடுகிறது. மோலியின் தன்வயப் பேச்சின் (Soliloquy) ஒரு பத்தியை 1925-ல் மொழிமாற்ற செய்தபோது இதனைக் கண்டுபிடித்தேன். இன்றுவரை அவருடைய படைப்புகளின் மொழியாக்கங்கள் ஹிஸ்பானிய, ரோமனிய மொழிகளில் தரம் தாழ்ந்தவையாகவே உள்ளன. அவரது லயமிக்க கூட்டுவார்த்தைகள் ஆங்கிலோ - சாக்சன் மற்றும் ஜெர்மானிய மொழிகளில் சிறப்பாக வெளிவருகின்றன. ஜாய்ஸ் உரைநடை மொழியைப் பயன்படுத்தி கவிதை வரிகளை உருவாக்கினார். அவரது படைப்புகள் கவிதையாகவே வாசிக்கப்பட வேண்டும்.

சீ.ஹி.: ஜாய்சின் Chamber music போன்ற கவிதைகளில் கையகப்படும் மொழிக்கும், A Portrait, Ulysses போன்ற உரைநடைகளில் வெளிப்படும் மொழிக்குமான அடிப்படை வித்தியாசம் குறித்த வியப்பு எனக்கு அநேக நேரங்களில் இருந்து வந்திருக்கிறது. கவிதையில், பிறிதொரு இடத்திலிருந்து கேட்பது போல தன் குரல் மாற்றிப் பேசுபவராக (Ventriloquist) மொழியை அணுகி, அதன் பரம சீடனாகி இலக்கியத்தின் இசைக் கீற்றை பிறிதொரு குரலில் ஒத்திகை பார்ப்பவராகிறார். ஆனால் உரைநடையிலோ ஏதோவொன்று கட்டவிழ்ந்து ஒரு புதிய உயிர்ப்புடன் புதிய வகையில் வெளிப்படுகிறது. அவர் செய்யுளை நேரடியாக அணுகும்போதெல்லாம் ஒரு வகையான தடைக்குள் சிக்கிக் கொண்டு விடுகிறார். ஆனால் அவருள் ஆழமாக மண்டிக்கிடக்கும், வெளிவரத்துடிக்கும் கவிமனம்தான் உரைநடையின் முன்னறியா வடிவங்களில் விளையாடும் உந்து சக்தியாக இருந்திருக்கிறது.

ரி.கி. 1941 - ல் கட்டுரையொன்றில் "மொழி நடையில் உயர்ந்தபட்ச வெற்றிகளைக் கண்ட பக்கங்களை" எழுதியவர் என ஜாய்சை பாராட்டியுள்ளீர்கள். ஒரு எழுத்தாளர் என்ற நிலையில் அவரது மொழிநடையின் தாக்கம் தங்களுக்கு இருந்ததாக நினைக்கின்றீர்களா?

ஜோ : யுலிசிஸ்-ல் ஒவ்வொரு அத்தியாயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும் வெவ்வேறு மொழிநடையில் எழுதத்துணிந்தது என்னை மிகவும் பாதித்தது. நானும் எனது படைப்புகளில் மொழி நடையின் பலவிதமான யுத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனாலும் நேரடியான தாக்கம் குறித்து உறுதியாகக் கூறமுடியவில்லை. அல்லது அப்படியொரு தாக்கம் ஏற்பட்டிருந்தால் அது நனவிலி நிலையில் நிகழ்ந்திருக்கக் கூடும். நான் தன்னுணர்வில் ஏற்றுக் கொண்ட இலக்கியத்தாக்கம் ஸ்டீவன்சன், செஸ்டர்டன், கிப்ளிங் மற்றும் ஷா போன்றவர்களுடையதே. நான் சிறுவனாக, பியூனஸ் அயர்சில் எனது தந்தையின் நூலகத்தில் இவர்களை வாசித்தேன். இதில் மிகச் சிறந்த ஆங்கில நூல்களின் தொகுப்பு இருந்தது. எனது இளம்பிராயத்தை இந்த நூலாசிரியர்களுடன் சேர்ந்து கனவு காண்பதில் கழித்தேன். கிப்ளிங்குடன் இந்தியாவிலும், கோல்ட்ரிட்ஜுடன் ஜானாடுவிலும், டிக்கன்சுடன் லண்டனிலும் சுற்றியலைந்தேன். இலக்கியம் என்பது எண்ணற்ற நடை உத்திகளுனூடான சாகச செயல்தான் என்ற முதல் அனுபவத்தை அநேகமாக இந்த நூலகத்தில்தான் பெற்றேன்.

ஆக, நூலகம் என்பது பல குரல்களில் பேசும் ஒற்றை மனம். நூலகங்களின் மீதான என் மயக்கம் என் கற்பனைப் பாத்திரங்கள் போன்றே அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக 9,00,000 புத்தகங்களைக் கொண்டிருந்த பியூனஸ் அயர்சின் தேசிய நூலகத்தில் பணியாற்றிட ஏங்கிருக்கிறேன். ஆனால், கடைசியாக 1955-ல் பெரானின் வீழ்ச்சிக்குப் பிறகு - அந்நூலகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட அதே ஆண்டில் என் பார்வையிழந்திருந்தேன். அங்கே என்னால வாசிக்கப்பட முடியாத புத்தகக் குவியல்களுக்கு ஊடாக நான் இருந்தேன். சில நேரங்களில் என்னால் இன்னும் கூட பார்க்க முடிவது போல் பாவனை செய்வேன்.இன்றவரை ஏதோவொரு சந்தர்ப்பததில் ஒரு புத்தகக்கடைக்குச் சென்று சில புத்தகங்களை வாங்கி என்னால படிக்கவியலும் என்பதாக என்னையே ஏமாற்றிக் கொள்கிறேன்.

எனது "எழுத்துக்களின்" மீதான தாக்கங்கள் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் நான்எழுத்தாளனாகவே கருதிக் கொள்வதில்லை. நான் மிகச் சிறந்த விசயங்களை எழுதுவதில்லை. (I don't write very good stuff). அதேபோல் நான் என்ன எழுதினாலும் என்னால் திரும்ப வாசிக்க இயலுவதில்லை. என் எழுத்துக்கள் குறித்த விமர்சனத்தையும் எப்போதும் நான் வாசித்ததில்லை. என் நூலகத்தில் இதுபோன்ற விமர்சனப் புத்தகம் ஒன்று கூட இல்லை. என் எழுத்தையும் தாண்டி நான் பிரபலமாகி விட்டேன் என்றுதான் எனக்குப் படுகிறது. எனது படைப்புகளாலன்றி அவற்றையும் மீறி புகழ்பெற்று விட்டேன் என்றுதான் எனக்குப் படுகிறது. இதில் எங்கோ தவறிருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். அநேகமாக மக்கள் என்னை வேறொரு எழுத்தாளனென்று தவறாகப் புரிந்து கொணடிருக்கிறார்களோ?

ரி.கி. : "அர்ஜென்டிய எழுத்தாளரும் மரபும்" என்ற கட்டுரையில் / புத்தகத்தில் உங்களை "கலாச்சார வெகுமனப் போக்கிற்கு" வெளியே உள்ள எழுத்தாளராக உணர்வதாகக் கூறியுள்ளீர்கள். ஜாய்ஸ்-ம் "வீடு, தாய்நாடு, ஆலயங்கள்" சுதந்திர வெளியைச் சுருக்கும் வலை, அதில் சிக்கிக் கொள்ளாமல் பறந்து செல்ல எத்தனிப்பேன் என்று கூறியபோதும் தனதுகதாபாத்திரமான ஸ்டீபனை தான் எப்போதுமே ஆங்கில மொழியுடன் சௌகரியமாக (At home) இருந்ததில்லை, அந்த மொழியின் வார்த்தைகளைப் படிப்பதோ எழுதுவதோ ஆன்ம சஞ்சலமின்றி நடந்ததில்லை என்று ஒத்துக் கொள்ளச் செய்தபோதும் இதே போன்றதொரு கருத்தை முன் வைக்கின்றார். தாங்களும் அதேபோன்றதொரு கலாச்சாரரீதியிலான அல்லது பின்காலனித்துவ ஸ்பானிய மொழியைப் பயன்படுத்தும்போது உணர்கிறீர்களா?

ஜோ : ஒரு அர்ஜென்டினியனாக ஸ்பானிய கலாச்சார வெகுமனப் போக்கிலிருந்து விலகியிருப்பதை உணர்கின்றேன். நான் ஸ்பானிய கலாச்சாரத்தைப் போன்றே ஆங்கில மற்றும் பிரெஞ்சுக் கலாச்சாரங்களுக்கும் நன்கு அறிமுகமானவனாகவே வளர்க்கப்பட்டேன். ஏற்கனவே ஐரோப்பிய மைய நீரோட்ட இலக்கிய மரபின் விளிம்பில் உள்ள மொழிநடையை, ஒரு அன்னியனாக ஸ்பானிய மொழியில் கையாளும்போது ஸ்பானிய மொழிக்கே நான் இரட்டை அன்னியனாகி விடுகின்றேன்.

சி.ஹி : எல்லா மரபுகளுமே அது தோற்றம் பெறுவதற்கு முன்பே கற்பிதம் செய்து கொள்ளப்பட வேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டு, ஹிஸ்பானிய-அமெரிக்க மரபு என்ற ஒன்று இருப்பதாகக் கருதுகின்றீர்களா?

ஜோ. : மரபு குறித்த கருத்தாக்கம் நம்பிக்கையின்பாற்பட்டது என்பது உண்மைதான். நமது கற்பனைகள் கடந்தகாலத்தைத் தொடர்ந்து மாற்றியும் புத்துருவாக்கம் செய்த வண்ணமிருக்கின்றன. ஆனால் என்னைப் பொருத்த மட்டிலும், ஹிஸ்பானிய - அமெரிக்க மரபு என்ற கருத்தில் எனக்கு பெருமளவில் நம்பிக்கை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். உதாரணமாக, நான் மெக்சிகோவுக்கு பயணம் மேற்கொண்டபோது அவர்களின் செறிவான கலாச்சாரம், இலக்கியங்களைக் கண்டு பேருவகை கொண்டேன். ஆனால், இன்னொன்றையும் இங்குகூறி விடுகின்றேன். எனக்கும் அந்தக் கலாச்சாரத்திற்கும் இடையிலான பொதுத்தன்மை எதனையும் நான் காணவில்லை; தங்களுடைய இந்திய (செவ்விந்திய) பூர்வீகத்தின் மீது செவ்விந்தியர்கள் கொண்டுள்ள வழிபாட்டு மரியாதையுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள இயலவில்லை என்ற போதிலும் நான் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டேன். அர்ஜெண்டின, உருகுவே கலாச்சாரங்கள் ஸ்பெயின், இத்தாலிமற்றும் போர்த்துக்கீசிய கலாச்சாரக் கூறுகளின் கலவையாகி ஐரோப்பிய - பாணியைக் கொண்டிருப்பதால் இவை ஏனைய லத்தீன் - அமெரிக்க நாடுகளிலிருந்து வேறுபட்டுத்தெரிகின்றன. எடுத்துக்காடட்hக அர்ஜெண்டினாவில் புழக்கத்தில் உள்ள பேச்சு வழக்கு அல்லது வட்டார வழக்குகளில் பெரும்பாலானவை இத்தாலிய மூலம் சார்ந்தவையாகும். நானும்கூட போர்ச்சுகல், ஸ்பெயின், யூத மற்றும் ஆங்கிலப் பூர்வூகத்தின் வழி வந்தவனே.

1| 2| 3
மேலும்
ஜோர்ஜ் லூயி போர்ஹே
பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்