2. ஏன் அது ஒரு வரலாற்று நிகழ்வு?
செப்டம்பர் 11 அன்று நடந்த வரலாற்று நிகழ்வு என்பது பற்றி நம் கேள்வியைத் திருப்புவோம். அது ஒரு வரலாற்று நிகழ்வு; ஏனென்றால் அதனால் ஒரு மாற்றம் உருவாகி உள்ளது. எந்த பகுதிக்கு துப்பாக்கிகளின் குறிவைக்கப்பட்டதோ அந்த திசையிலிருந்து மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது புதியது; அடிப்படையாகவே புதியது. பழைய முறைகளிலிருந்தும் புதியது. ஒன்றுபட்ட அமெரிக்காவிடம் தேசிய எல்லை தாக்குதலுக்கு உள்ளான நிகழ்வு. பிரிட்டன் வாஷிங்டனை தீக்கிரையாக்கின 1814-ல் கடைசியாக நடந்தது. மற்றபடி கடந்த 200 வருடங்களில், அமெரிக்கர்களான நாம் தான், லட்சக்கணக்கில் ஆதிகுடிமக்களை வெளியேற்றியும் - அழித்தொழித்தும் உள்ளோம். மெக்ஸிகோவின் பாதியைப் பிடித்து வைத்துள்ளோம். கரீபியன் மற்றும் மைய அமெரிக்காவின் பகுதிகளில் அழிவும், அட்டூழியம் நடத்தியும் சில காலம் முன்பு ஹவாய்த்தீவை பிடித்தடக்கிக் கொண்டும்; பிலிப்பைன்ஸை அடக்குவதற்கு நடத்த போரில் 1,00,000-க்கும் மேற்பட்ட பிலிப்னோக்களைக் கொன்றும் வந்திருக்கிறோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் முழுமையும் சுற்றி இத்தகையச் செயல்கள் பல்வழிகளில் நடைபெறுகின்றன என்பதை நான் விவரிக்க இயலாது. ஆனால் எப்போதுமே வேறு யாரையாவது கொலை செய்கிறோம். வேறு எங்காவது போர் புரிகிறோம். எப்போதுமே மற்றவர்கள்தான் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில் இந்த மாற்றம் மேலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், அதன் வரலாறு நம் வரலாற்றை விடக் கொடுமையானது. நாம் அடிப்படையில் அமெரிக்காவின் ஒரு கிளைதான். நூற்றாண்டுகளாக ஐரோப்பா சர்வசாதாரணமாக உலகம் முழுவதும் மக்களைக்கொன்று குவித்து வந்திருக்கிறது. இப்படித்தான் உலகை அது வெற்றி கொண்டது; மற்றபடி, குழந்தைகளுக்கு சவ்வுமிட்டாய் கொடுப்பது போல அல்ல. ஒருவரை ஒருவர் பலியாக்குவதுதான் ஐரோப்பாவின் முதல் தர விளையாட்டாக பல நூற்றாண்டுகள் நீடித்து வந்திருக்கிறது. 1945-ல் இந்த விளையாட்டு முடிவுக்கு வரக்காரணம், அடுத்தமுறை அவர்கள் இந்த ஆட்டத்தை விளையாட நேர்ந்தால் முழு உலகமுமே அழிந்துவிடும் என்பதால்தான்.
இந்த படுபயங்கரமான கொலையுகம் முழுவதும் ஐரோப்பியர்கள் மாறி, மாறி பலிபோட்டுக் கொண்டார்கள் அல்லது ஐரோப்பியர்கள் பிறரைக் கொன்று குவித்தார்கள். காங்கோ பெல்ஜியத்தைத் தாக்கவில்லை; இந்தியா இங்கிலாந்து மீது போர் தொடுக்கவில்லை; அல்ஜீரியா பிரான்சோடு வலுச்சண்டைக்கு போகவில்லை. ஐரோப்பியர்கள் பிறரைக் கொல்வதுதான் ஒரே சீராக எங்கும் நடந்தது.
முதல் தடவையாக துப்பாக்கிகள் வேறு திசை நோக்கிக் குறி வைத்தன. நீங்கள் கையில் சாட்டையை வைத்திருக்கிறீர்களா அல்லது காலங்காலமாக சாட்டையடி பட்டுக்கொண்டு இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்துதான் உலகின் வித்தியாசம் தெரிகிறது. எனவே, ஐரோப்பாவிலும், இவ்விடம் உட்பட அதன் கிளைகளிலும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
3. பயங்கரவாதத்துக்கு எதிரானப் போர் என்றால் என்ன?
"பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றால் என்ன?" இது ஒருபுறமிருக்கும் கேள்வி "பயங்கரவாதம் என்றால் என்ன?" இது மற்றொருக் கேள்வி. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லப்படுவது காட்டுமிராண்டிகள் பரப்புகிற ஒரு வித புற்றுநோய்க்கும் எதிரானப் போராட்டம் போல; ஒழுங்கீனமானப் பிறவிகள் ஒப்பற்ற நாகரிகம் மீது செலுத்துகிற தாக்குதல் போல மேல்தட்டுகளில் சித்தரிக்கப்படுகிறது. நான் சொல்லப்போகிற வார்த்தைகள் அதிபர் ரேகனும் அவருடைய உள்துறைச் செயலாளரும் 20 வருடங்களுக்கு முன்பு உதிர்த்தவை. ரேகன் அரசு 20 வருடங்களுக்கு முன்பு "பன்னாட்டுப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் புரிவது எமது வெளியுறவுக் கொள்கை" என்ற பிரகடனத்தோடு ஆட்சிக்கு வந்தது அதுதான் நம்முடைய வெளியுறவுக் கொள்கையின் மையமாக அமைந்துள்ளது. ரேகனது நிர்வாகம் இந்தவித "நாகரிகத்துக்கு எதிரான காட்டுமிராண்டிகள்" பரவுவதை தடுக்கும் பொருட்டு உலகம் முபவதும் பன்னாட்டு பயங்கரவாதக் குழுக்களின் வலைப்பின்னலை உருவாக்கியது. முன்னெப்போதும் நடந்திராத வகையில் இந்தக் குழுக்கள் பூகோளத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டுக்கடங்காத கொடுஞ்சசெயல்களை அரங்கேற்றின.
ரேகனின் அமெரிக்கா நிகராகுவாவுக்கு எதிரான போரில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து, நாட்டை மீட்டெடுக்க முடியாத வகையில் நாசக்காடாக்கியதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நிகராகுவா எதிர்வினை புரிந்தார்கள். அவர்களின் எதிர்வினை வாஷிங்டனில் வெடிகுண்டு வைப்பதாக அமையவில்லை. அவர்கள் உலக நீதிமன்றத்திலும், பன்னாட்டு அவை பாதுகாப்புக் குழுவிலும், பன்னாட்டு அவை பொதுக்குழுவிலும், போய் முறையிட்டார்கள். நிகராகுவா அனைத்து நாட்டிடைச் சட்டங்களையும் பயன்படுத்தி நீதிக்காகப் போராடியது அடக்குமுறை ஆட்சி செய்கிற உலகில் அவர்களது முறையீடுகள் செல்லுபடி ஆகவில்லை. வேலைக்காகவில்லை.
|