முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  பேட்டிகள்
 
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்
ஷை: இலக்கிய சிந்தனை அமைப்பில் உங்கள் சிறுகதை ஒருமுறை மாதப் போட்டியில் தேர்வாகி இருந்தது. நிறைய சமூக விழிப்புணர்வு மற்றும் குடும்பத்தில் அன்பு, பாசம் பற்றிய உறவினை மையமாய் வைத்த கதைகளை எழுதி இருக்கிறீர்கள். எப்படி எல்லா சப்ஜக்டும் எழுதறீங்க?

ரா: ஒரு எழுத்தாளன் எப்போதும் தன் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள் நம்மைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். தினசரி செய்தித்தாளில் வரும் செய்திகள் கூட நமக்கு ஒரு கதைக் கருவினைத் தந்து விடும். மேலும் எழுதும் சப்ஜக்டில் தெளிவாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பற்றிய கதை என்றால் அதன் வல்லுனரிடன் போய் நான் விவரம் சேகரிப்பேன். மருத்துவக் குறிப்புகளை கதையில் சொல்ல வேண்டுமானால் அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அணுகி கேட்டுக் கொள்வேன். ஆர்மி சம்பந்தப்பட்ட நாவல்களுக்கு ஐஎன்எஸ் அக்ரானி சென்று விளக்கங்கள் பெறுவதுண்டு. கதைகளில் லாஜிக் அவசியம் வேண்டும்.

ஷை: ஆனால் சினிமாவில் லாஜிக்கே இல்லாமல் தயாரித்தாலும் அவை வெற்றி அடைகின்றன. அது எப்படி சார்?

ரா: சினிமா வேறு துறை. அதைப் பார்ப்பவர்கள் ரசிகர்கள். கதை படிப்பவர்கள் வாசகர்கள். இருவருக்கும் வித்தியாசம் உண்டு. அதனால் தான் புகழ் பெற்ற நாவல்கள் திரைப்படம் ஆகும் போது தோல்வியடைகின்றன.

ஷை: உங்கள் க்ரைம் நாவல்களுக்கு அமோக வரவேற்பு கிடைப்பது எதனால் என நினைக்கிறீர்கள்?

ரா: எனது நாவல்களில் பாலுணர்வைத் தூண்டும் வரிகள் இருக்கது ஆபாச வர்ணனை வராது ஒளித்து வைத்துப் படிக்கிற மாதிரியான விஷயங்கள் கிடையாது பெண்கள் விரும்பிப் படிக்கிற மாதிரி இருக்கும். என் கதை நாயகி கோழையாக இருக்க மாட்டாள். பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வாழ நினைப்பாள்.

அதே போல, தப்பு செய்தவர்கள் சட்டத்திலிருந்து விடுதலை பெற்றாலும் இயற்கையின் முன்பு அவர்கள் தோல்வியை சந்திக்க நேர்ந்து தக்க தண்டனை அடைவார்கள் என ஆணித் தரமாய் சொல்வேன். விஞ்ஞான விஷயங்கள், பொது அறிவு இவைகளைத் தற்போதைய நாவல்களில் அதிகம் சேர்க்கிறேன். காசு கொடுத்து என் நாவலை வாங்கிப் படிக்கும் வாசகர்க்கு கதையை படித்து முடிக்கும் போது உபயோகமான விஷயம் மனதிற்குள் சென்று அடைய வழி செய்கிறேன்.

ஷை: உங்கள் க்ரைம் கதைகள் சிலவற்றில் ஆன்மிகமும் கலந்திருக்கும் இல்லையா?

ரா: ஆமாம்.. அதனல் பல கோயில்களில் அர்ச்சகர்கள் எனக்கு வாசகர்கள் ! கோயிலுக்கு நான் செல்லும் போது "இன்னும் நிறைய ஆன்மீகம் எழுதுங்கள் ராஜேஷ்குமார்! நாங்கள் எல்லாம் உங்கள் வாசகர்கள்!" எனும் போது அதையே பெரிய விருதாய் நினைக்கிறேன்.

நான் எழுதுவது இலக்கியம் இல்லை என்று சொல்கிறவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எங்கோ குக்கிராமத்தில் இருக்கிற பாமரனுக்கும் என் எழுத்து போய்ச் சேர்ந்து அவன் மனதை மகிழ வைப்பதே என் குறிக்கோள். அதை செய்து கொண்டே இருக்கிறேன், இந்த நிறைவு எனக்கு போதும் !

ஷை: இந்த மனநிறைவு தானே உங்களை இத்தனை நாட்களாய் எழுத்துலகில் பிரகாசித்து வைத்துக் கொண்டுருக்கிறது? கடைசியாக ஒரு கேள்வி இந்த எழுத்துதிறமை உங்களுக்குள் எப்படி வந்தது?

ரா: இது வரை எழுதியதும் இப்போது எழுதுவதும் இனி மேல் எழுதப் போவதும் எல்லாம் அந்த இறைசக்திக்கே!
இறை அருள் தான் என்னுள் புகுந்து என்னை எழுத வைக்கிறது.

ஷை: நன்றி ராஜேஷ்குமார்! எல்லாம் வல்ல இறைவன் அருளில் நீங்க பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழன் இருக்குமிடலெம்லாம் உங்கள் படைப்புகளைக் கொண்டு சேர்த்து புகழுடனும் நலமுடனும் இருக்க வேண்டும். நன்றி...!

ரா: நன்றி சைலஜா!

1| 2
மேலும்
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்