முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  பேட்டிகள்
 
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்
Webdunia
சில்லென்று காற்று வீசும் ஒருகுளிர்கால மாலைப்பொழுதில் க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரை அவரது இல்லத்தில் சந்திக்கப் புறப்பட்டேன். ஏற்கனவே எழுத்து வட்டத்தில் இருப்பதால் ஓரளவு பரிச்சயமானவர் தான் எனினும் இணையத்திற்காக எடுக்கும் பேட்டி என்பதால் ஒரு நிருபராய் அவதாரமெடுத்து அவர் முன் நின்ற போது பயமும் தயக்கமுமாய் வந்தது.

ஆனால் அவரது எதார்த்தமான எளிமையான பேச்சில் தொடக்கத்திலேயே பயம் விலகி அவர் மீது பிரமிப்பு ஏற்படத் தொடங்கியது. அடக்கமும் இறை நம்பிக்கையும் தான் அவரை இந்த உயரத்தில் கொண்டு நிறுத்தி உள்ளது என்றால் அது மிகை அல்ல.

இனி பேட்டியை ஆரம்பிக்கலாமா?

ஷைலஜா: வணக்கம் ராஜேஷ்குமார்!

ராஜேஷ்குமார்: வாங்க சைலஜா! (கோவைக்காரர்களுக்கு "ஷை" பிடிக்காது!)

ஷை: உங்களின் எழுத்துப் பிரவேசம் பற்றிய அறிமுகத்துடன் பேட்டியைத் தொடங்கலாமா?

ரா: கண்டிப்பாக. நான் எழுத்தாளனாக உருவான ஆரம்ப காலத்தில் சமூக சிறுகதைகளும் ஆன்மீகம் கலந்த சிறுகதைகளுமே எழுதி வந்தேன். பெரும்பாலான கதைகள் குமுதத்தில் வந்தன. 1977லிருந்து 1980 வரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாயின. 1980ல் குமுதத்தில் துணை ஆசிரியராய் இருந்த ரா.கி.ரங்கராஜன் அவர்கள் எனக்கு அவர்களது மாலைமதி இதழுக்கு மாத நாவல் அனுப்ப சொல்லிக் கேட்டிருந்தார்.

அப்போதெல்லாம் மாலைமதிக்கு பிரபல நாவலாசிரியர்கள் மட்டுமே எழுதுவார்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் ஒரு புறம் மகிழ்ச்சி எனினும் மறுபுறம் நடுக்கம்தான்! 100 பக்கங்களுக்கு கதை எழுதுவதெல்லாம் அப்போது எனக்கு முடியாத ஒன்று. அதனால் ராகிர அவர்களுக்கு, "மன்னியுங்கள் எனக்கு நாவல் எழுத வரும் என்று தோன்றவில்லை" என பதில் போட்டு விட்டேன்.

ஷை: அப்படியா? அரம்ப கட்டத்தில் எல்லாருக்குமே ஏற்படும் தன்னம்பிக்கை இழப்பு உணர்வு தான் அது. ஆனால் உன்னால் முடியும் என தூண்டி விட்டால் அந்த ஊக்கமே நம்பிக்கையை வளர்க்கும் இல்லயா?

ரா: ஆமாம், உண்மை தான் எனக்கு அந்த தன்னம்பிக்கையை தூண்டி விட்டதும் ராகிரா தான். நாவல் எழுத
பார்முலாவை எடுத்துரைத்து கதையில் கொஞ்சம் க்ரைம் வைத்தால் சுவாரஸ்யமாயிருக்கும் என்ற அவரது தூண்டுதல் என் ரத்த ஓட்டத்தில் க்ளூகோஸாய் கலக்க நல்ல நாவல் ஒன்றினை எழுதி மாலைமதியில்
பிரசுரமாகி அது புகழோடு பெயர் வாங்கித் தந்தது.

அதற்கு பின் கல்கண்டில் க்ரைம் சப்ஜெக்டில் தொடர் கதை கேட்டார்கள். தமிழ் வாணன் அவர்கள் மட்டுமே எழுதி வந்த ஒரு பத்திரிகையில் நான் எழுதுவதா? நம்ப முடியாமல் மறுபடி விசாரித்தேன். "ஆமா நீங்க தான் எழுதணும். குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி உங்க மாலைமதி நாவல் படிச்சி உங்களை கல்கண்டில் எழுத சிபாரிசு செய்தார் ஆகவே உடனே சினாப்ஸிஸ் அனுப்புங்க" என்று கல்கண்டு அலுவலகம் அன்புக் கட்டளை இட்டது.

ஷை: ஏழாவது டெஸ்ட் ட்யூப் - இதானே அந்த தொடரின் பெயர்?

ரா: ஆமா. அதன் அமோக வெற்றியில் தொடர்ந்து அங்கே க்ரைம் நாவல்கள் தொடர்ந்து வெளி வந்தன.
நில் கவனி கொல் - மேனகாவின் மே மாதம் என்று எட்டு கதைகளுக்கு மேல்!

ஷை: இதன் விளைவு தான் உங்களை அறியாமலேயே உங்கள் மேல் க்ரைம் மன்னன் என்ற பட்டம் ஒட்டிக்
கொண்டு விட்டது.. ம்ம்.. அப்புறம்?

ரா: 1985ல் ஆசிரியர் ஜி அசோகன் எனக்காக க்ரைம் நாவல் என்ற பெயரில் மாதப் பத்திரிகை ஆரம்பித்தார். மாதா மாதம் வித்தியாசமான கதைக் கருத்துக்களோடு புதுமையான தலைப்புகளில் நாவல்கள் எழுத
ஆரம்பித்தேன். 1980ல் முதல் நாவல் முதல் தொடர்கதை வெளிவந்தது இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட
நாவல்களை எழுதி விட்டேன் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஷை: இலக்கியமாகுமா உங்கள் எழுத்து என்று சிலர் உங்களிடம் கேட்டார்களாமே?

ரா: அவர்களுக்கு நான் இப்படித்தான் சொன்னேன்." க்ரைம் இலக்கியம் கிடையாதா? க்ரைம் என்றால் என்ன? மண் பொன் பெண் இவைகளை தவறான முறையில் அடைய நினைப்பவர்கள் செய்யும் அடாவடிச் செயல் தானே க்ரைம்?

மண்ணாசைக்கு மஹாபாரதம் பெண்ணாசைக்கு ராமாயணம்! இவைகளில் இல்லாத க்ரைமா? சிலப்பதிகாரம் கூட 50ரூ க்ரைம் சப்ஜக்ட் தான். சாகா வரம் பெற்றிருக்கும் காவியங்களே க்ரைமை அடிப்படையாய் வைத்து புனையப் பட்டிருக்கும் போது சாமானியன் நான் எழுதினால் மட்டும் அது தவறா?" இப்படி நான் கேட்டதும் அவர்கள் அப்போதைக்கு மௌனமானார்கள். நாவலிலோ சிறுகதையிலோ க்ரைம் சம்பவங்கள் வந்தால் அது இலக்கியம் ஆகாது என்கிற பொதுவான கருத்து எழுத்துலகில் முக்கியமாய் தமிழ் எழுத்துலகில் இருக்கிறது.

1| 2
மேலும்
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்