இவற்றிற்கெல்லாம் பிறகே தொல்காப்பியம் பதிக்கப்படுகிறது. 1848ல் தொல்காப்பியத்திற்கான நச்சினார்க்கினியரின் உரை வெளியிடப்படுகிறது. 1885ஆம் ஆண்டில்தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாமோதரம் பிள்ளை என்பார் தொல்காப்பிய பொருளிலக்கணத்தின் நச்சினார்க்கினியர் உரையை பதிக்கிறார்.
ஏடுகளிலிருந்து நூற்பா நிலையை நன்கு புரிந்து கொள்ளும் முறையில் முதன் முதலாக தொல்காப்பியத்தை மகாலிங்க ஐயர் என்பவர் பதிப்பிக்கிறார்.
அதன் பிறகு 1857ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் உருவாகிறது, இது மொழிசார்ந்த கல்வியில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்தது.
தமிழ் மொழியில் உள்ள பக்தி சிந்தாந்தம் சார்ந்த பல நூல்களை வெளியிட்டு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது சைவ சிந்தாந்த நூல் பதிப்புக் கழகம்.
சங்க இலக்கிய பதிப்பியல் துறையில் முன்னோடிகளாக கருதப்படும் ஆறுமுக நாவலர் மற்றும் உ.வே. சாமிநாத ஐயர் ஆகியோர் திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளிட்டனர். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐங்குறுனூறு, பதிற்றுப்பத்து ஆகியவை வெளிவந்தன.
ஓலைச் சுவடிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து அவைகளை அச்சில் ஏற்றி புத்தகங்களாக வெளியிட்டு பாரம்பரியத்தைக் காத்த பெருமைக்குரியவர் தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத ஐயர்.
மறைமலையடிகள், மகாதேவ முதலியார், நாராயணசாமி ஐயர், அகநானூறு புகழ் இராகவ ஐயங்கார் ஆகியோர் சங்க இலக்கியப் பதிப்புகளில் அரும்பணி மேற்கொண்டவர்களாகின்றனர். பிறகு இதில் பெரும்பங்கு வகித்தவர் வையாபுரி பிள்ளை. இன்றும் அவரது தொகுப்புகள் கொடுக்கும் வாசிப்பனுபவம் ஒரு தனிச் சிறப்பு என்பதை மறுப்பதற்கில்லை.
சித்தர்களின் பாடல்கள், சித்த வைத்தியக் குறிப்புகள் ஆகியவற்றை ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சுக்கு ஏற்றி தாது வர்க்கம், மூல வர்க்கம் என்ற பெயரில் 1901ஆம் ஆண்டு இரண்டு புத்தகங்களை வெளியிட்டு கண்ணுசாமி பிள்ளை பெருமை சேர்த்தார்.
கடல்கோளால் காணாமல் போன சுவடிகளும் எழுத்துக்களும் ஏராளம். ஒரு மொழியின் இலக்கியங்கள் தொலைந்து போகிறது என்றால் அது அந்த பண்பாடு தொலைந்து போனதாகவே அர்த்தம். இதனை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அன்றைய பெரியோர்கள், அச்சு எந்திரம் என்ற கலாச்சார மீட்டுருவாக்க எந்திரத்தை நன்கு பயன்படுத்தி நமக்கு நமது பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய நடைமுறைகள் ஆகியவற்றை பதிப்புகள் மூலம் மீட்டுத் தந்துள்ளனர்.
ஒரு 200 ஆண்டுகால வரலாறு கொண்டது தமிழ் பதிப்பியற் துறை. இன்று கணினித் தொழில் நுட்பத்தின் வரவால் செம்பதிப்புகள் கொண்டு வரப்படுகின்றன. ஒளி அச்சு வடிவங்கள் கண்களுக்கு இனிமையாக வெளிவருகிறது.
அச்சு எந்திரங்களின் வருகையால் பெரிதும் பயனடைந்த ஒரு சமுதாயம் தமிழ் சமுதாயம் என்றால் அது மிகையாகாது.
|