முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கிரேக்கச் சிந்தனை - எஸ்.வி. ராஜதுரை
(`எக்ஸிஸ்டென்ஷியலிசம்' என்ற நூலிலிருந்து )
இவ்வுலகை மறுத்து, சாரங்களின் உலகில் சரணடைந்த பிளேட்டோவுக்கும் இவ்வுலகை வென்றெக்கப் புறப்பட்ட மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுக்குமிடையே ஒரு மறைமுகமான தொடர்பு இருக்கிறது.

மனித வாழ்வுக்கு ஒளியூட்டியது அறிவு மரபு என்ற உண்மைக்கு அடியிலே மற்றொரு உண்மை ஒளிந்துள்ளது.

மனிதனின் மற்றெல்லாச் செல்களைக் காட்டிலும் மேன்மையானது எனக்கருதப்பட்ட அறிவுதான், சாரங்களின் உலகைத் தேடுமாறும், இவ்வுலகின் தீமைகளைக் களைந்தெறிய சக மனிதருடன் ஒன்றிணைந்து போராடுவதற்குப் பதிலாக, தனிமனித விமோசனம் தேடுமாறும் பிளேட்டோவைத் தூண்டியது.

மனித அவலங்களின் ஊற்றுக் கண்ணாக இருப்பது வர்க்க சமுதாயம் என்ற முழுமுதற் காரணத்தை அறிய முனைப்பு காட்டாமல், இப்பேரண்டம் முழுவதற்கும் முழுமுதற்காரணமாக இருப்பவரைப் பற்றிய தேடலில் அரிஸ்டாட்டிலை ஈடுபடுத்தியது. `அறிதல்' என்பது இவ்விரு சிந்தனையாளர்களிடையே எத்தகைய பாத்திரம் வகித்தது என்பதை நாம் சிறிது காண்போம்.

அறிவின் துணைகொண்டு தனது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் கிரேக்கனிடமும் ஹேட் என்னும் பாதாளத்திலிருந்து மரண தேவதை தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு வருகிறது. `மரணம்' என்ற பிரச்சினை பிளேட்டோவை மிகவும் பாதிக்கிறது. அப்போது பேரண்டம் ஒளியுடன் இருட்டையும் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. நன்மையைக் காட்டிலும் தீமையே பெரிதாகத் தோன்றுகிறது. எதேனிய அடிமைக் குடியாட்சியின் தத்துவவாதியான பிளேட்டோ நிலை குலைந்து போகிறார். எக்காலத்தையும், எல்லா வாழ்க்கையையும் பார்வையிடுபவராக இருக்க விரும்புகிறவர் பிளேட்டோ. எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. நிலையானது ஏதும் இல்லை என்று யெராக்லிடஸின் சீடன் கூறுவதும் பிளேட்டோவின் காதுகளில் விழுகிறது. நான் நிலையற்றவனா? என் கிரேக்க சமுதாயம் நிலையற்றதா? நான் இறவாமை பெற்றவனா? என் கிரேக்க சமுதாயம் நிலையற்றதா? நான் இறவாமை பெற்றவனா? இல்லையா? நான் அழிந்து போவேனா? எனது ஆர்வங்களைச் சிதறடிக்கும் ஏதோ வொன்று இப்பேரண்டத்தில் உள்ளதா? அதை நான் அறிந்து கொள்ள முடியுமா? என் மரணத்தை நான் வெல்ல முடியுமா? இவ்வாறெல்லாம் பிளேட்டோ சிந்திக்கிறார்.

இப்பேரண்டம் முற்றிலும் நல்லதாகவோ அல்லது முற்றிலும் தீயதாகவோ இருந்தால் பிரச்சினையே இல்லை. நாம் நிம்மதியுடன் இருப்போம். ஆனால் இப்பேரண்டம் நல்லதாக இருக்குமானால், தீமை எங்கிருந்து வருகிறது? இப்பேரண்டம் நோக்கம் அற்றதாக இருக்குமானால், நன்மை எங்கிருந்து வருகிறது? பிளேட்டோ இப்பிரச்சனையைத் தீர்க்க ஒரு த்வைதக் கொள்கையைக் கையாள்கிறார். மாற்றமும் அழிவும் கொண்ட பொருண்மை உலகைவிட்டு, மாற்றமே இல்லாத, நிலைத்த தன்மை கொண்ட கருத்துகளின் உலகுக்கு வருகிறார் பிளேட்டோ. இக்கருத்துகள் கூட, ஒரு வகையில், புறப்பொருள்களால் வழங்கப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சுருக்கப்பட்ட கருத்தமைப்புகள்தான் என்பதை அவர் உணரவேயில்லை.

மனிதன் சாகிறான், ஆனால் மனிதகுலம் இருந்துகொண்டே இருக்கிறது. குதிரை சாகிறது. ஆனால் குதிரையினம் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட, தனிப்பட்ட, திட்டவட்டமான ஒன்றைக் காட்டிலும், பொதுவான, அருவமான ஒன்றே நிலையானது என்று பிளேட்டோ கருதுகிறார். பிறகு அவற்றைப் பற்றிய கருத்தே நிலைத்துவிடுகிறது. இறவாமை, அழியாமை, எல்லையில்லாத் தன்மை இவற்றில் தம் கவனத்தைச் செலுத்தும் பிளேட்டோவுக்கு பிதகோரஸின் கணிதம் பெரும் நம்பிக்கையைத் தருகிறது. கணிதம் அழிவற்ற, நிலையான உண்மைகளைச் சொல்கிறது. அதன் துணைகொண்டு முதலும் முடிவுமற்ற சாரங்களை அறிந்து கொள்ளலாம்!

<< 1 | 2 | 3  >>  
மேலும்
ஃபிரான்ஸ் காஃப்கா‌வி‌ன் “விசாரணை”
பூனைகள் இல்லாத வீடு - புத்தக மதிப்பீடு
நாவலா‌சி‌ரிய‌ர் ‌நீல ப‌த்மனாபனு‌க்கு சா‌கி‌த்ய அகாதெ‌மி ‌விருது!
நீர்ப்பண்பாடு
டோரிஸ் லெஸ்ஸிங் – வாழ்க்கை, போராட்டம், இலக்கியம்!
சுந்தர ராமசாமி - ஓர் எதிர்ப்புக் குரல்