வாசிப்பு:
காஃப்காவின் இந்த நாவலைப் பொறுத்தவரையில் இரண்டு விளக்கங்கள் உண்டு. ஒன்று இறையியல், இரண்டாவது மனோவியல். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நிராகரிப்பவையல்ல. உளவியல் வாசிப்பு அவர் சொந்த வாழ்வில் அவருக்கும் அவர் தந்தைக்கும் இருக்கும் உறவை மையப்படுத்தும் வகையில் அமைகிறது. அதாவது சர்வாதிகாரம் பெற்ற தந்தை முன்னால் மகன் ஒன்றும் செய்ய முடியாமல் போகும் நிலை இந்த நாவலில் உருவகமாக வருகிறது என்று கூறலாம்.
இதையே யூத-கிறித்தவ பின்னணியில் கூறினால் தந்தை சமயத்திற்கும் மகன் சமயத்திற்கும் உள்ள முரண்பாடாக விரித்துக்கூறுவர் இறையியல் அபிமானிகள்.
இந்த நாவலில் வரும் பல காட்சிகள் கனவுலகக் காட்சிகள் போல் வருகின்றன. நிகழ்வுகள் மாறி மாறியும் புதிர் தன்மை மிகுந்ததாகவும் சாதரண நிகழ்வுகள் கூட பயங்கர நிகழ்வுகளாக மாறிவிடுகின்றன. ஜோசஃப் தன் சாதாரண வீட்டுக் கதவையோ அல்லது தன் அலுவலகக் கதவையோ திறக்கலாம் ஆனால் அங்கோ வேறு விதமான உலகம் திறந்து அங்கு நீதிமன்றம் அதன் வேலைகளை செய்து கொண்டிருக்கும். அது போன்ற காட்சிப்படுத்தல்கள் உணர்வற்ற மனத்தின் அடக்கப்பட்ட மனப்பீதிகள் அன்றாட வாழ்வினுள்ளும் வன்முறையாக புகுந்து மனச் சஞ்சலத்தை உருவாக்குவதை அர்த்தப்படுத்துகிறது.
இறையியல் ரீதியான வாசிப்பு உளவியல் வாசிப்பை நிராகரிப்பதில்லை. ஜோசப்பின் குற்ற உணர்வு கண்ணுக்குத் தெரியாத கடவுள் மற்றும் ஊழல் நிறைந்த சட்டக்காவலர்கள், இவர்களுக்கு முன்னால் மனிதனின் நிலமை என்ன என்பதை பயங்கரமாக எடுத்துரைக்கிறது. கடவுள் மற்றும் அதைச்சார்ந்த அமைப்புகள் மீது இந்த நாவல் தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது.
சட்டமும் அதை வழி நடத்துவதாகக் கோரப்படும் புனித ஆவியும் சட்டத்தின் முன்னால் குற்றவாளியாக்கப்பட்ட மனிதனுக்கு அவன் குற்ற உணர்வை அதிகரித்து அவன் தன் குற்ற உணர்வை (குற்றத்தை அல்ல) வெளிப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்தை இந்நாவலின் நாயகன் ஜோசஃப் முறியடிக்கிறான். அவனால் குற்ற உணர்வுடன் கடவுளின், சட்டத்தின் முன் அடிபணிய முடியவில்லை . ஆகவே ஜோசப் கே யின் துன்பம், தோல்வி உண்மையில் கடவுளின் தோல்வியே.
காஃப்கா போன்ற மேதைகளின் இலக்கியங்களில் எப்போதும் மிகவும் செறிவான பல விளக்கங்கள் அடங்கியிருக்கும். இதை நாம் உளவியல் ரீதியாக வாசித்தாலும் அல்லது அரசியல், இறையியல் விளக்கம் அளித்தாலும் காஃப்காவின் விசாரனை அளவுக்கு நவீன யுகத்தின் மனக் கவலைகளையும், பீதிகளையும் வெளிப்படுத்தும் சிறந்த இலக்கியம் உருவாகவில்லை என்று தைரியமாகக் குறிப்பிடலாம்.
|