முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கட்டுரைகள்
 
நீர்ப்பண்பாடு
-முனைவர் பி.ஆறுமுகம். செயின்ட் ஜோசப் கல்லூரி, தமிழ்த்துறை
gangai
webdunia photoWD
ஆற்றுத் தண்ணீர்க்கு அழகுண்டாம் அடைந்த சுனைக்கு மகோதரமாம்
தூற்று மாரிமெய்யிறுக்கும் தொலையாக் கிணறே கயந்திரட்டும்
மாற்றுங்குளமே வியாதியில்லை மாறாக்குளமே வியாதியுண்டு
தோற்ற மதுரமொழி மயிலே துலங்குந்தண்ணீர்க் குணங்காணே!

என்ற தனிப்பாடல் இதனை மெய்ப்பிக்கும்.

திருவண்ணாமலையில் தீயாகி, தில்லியில் வெளியாகி, திருவாரூர் மண்ணாகி, காளஹஸ்தியில் காற்றாகி, ஆனைக்காவில் நீரானவன் சிவபெருமான். தில்லையும், திருவாரூரும் ஆனைக்காவம் காவிரிக் கரைத்தலங்கள். பரதத்தில் மறைந்தது பார்முதல் பூதம்; பரத்தை மறைத்தது பார்முதல் பூதம். பரத்தில் நீரில் பார்முதல் பூதம் மறைந்த தலம் திருவானைக்கா. அங்குள்ள நீர்காவிரி நீர். பானையாகிய கரகத்தில் காவிரி நீரை அடைத்துக் காவிரிக்கரை மக்கள் பங்குனி, சித்திரை மாதங்களில் ஆலயங்களில் கரகவிழாக்களை நடத்துவதை இன்றும் காணலாம்.

மஞ்சனநீர் கொணர்தல் பெருவழக்காய் நிற்கிறது. கும்பகோண மகாமகக் குளத்து நீர், பன்னிரண்டு ஆண்டிற்கு ஒரு முறை கங்கை, யமுனை உள்ளிட்ட நவநதிகளின் நூற்றியெட்டுத் தீர்த்தங்களால் நிறைவதால், புனிதநீராடல் பெருவிழாவாய் நடக்கக் காண்கிறோம். தாயுமானவர் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றையும் இறையாக்குவதைப் பராபரக் கண்ணியொன்றால் உணரலாம். 'கங்கைதன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழிகாவிரி' எனும் இளங்கோவின் வாக்கும். 'கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்' எனும் கூற்றும் இருபெரும் ஆறுகளும் இறைத்தொடர்பு மிகுதியும் பெறுவதை விளக்கி நிற்பன.

பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் பத்தில் நீராடல் பெண்பாற்குரியது. காளையும் கன்னியும் இணைவதற்குப் பூத்தரு புணர்ச்சி. களிறுதருபுணர்ச்சி. புனல்தரு புணர்ச்சி மூன்றும் ஏதுவாகும். அருவி ஆடி அஞ்சுனைக் குடையும் பெண்களை நீர் இழுத்துச் செல்ல, மீட்டுவரும் ஆடவர் கைப்பிடிப்பதே புனல்தரு புணர்ச்சியாம். இதனால் ஆடவர் நீர்மேல் ஆடும் கலையில் வல்லவராவர். அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று ஜலஸ்தம்பம் என்பதாம். காவிரிக்குக் கல்லணை கண்ட கரிகாலன் மகள் ஆதிமந்தி. நீர்மேல் ஆடுதலில் வல்லவன் ஆட்டனத்தி ஆயினும் காவிரி நீரால் அடித்துச் செல்லப்பெற்றபோது 'ஆதிமந்திபோலப் பேதுற்று அலைய' எனும் சங்கத் தொடர் கூறுபது போல, காவிரிக்கரை நெடுகக் கரைந்து சென்றவன் ஆதிமந்தி. இச்சங்கச் செய்தி காவிரியாற்றொரு தொடர்பு பெற்றது. இன்னும் ஆடிப்பெருக்கன்று வீரம் காட்ட ஆடவர் காவிரியில் துடுமெனப் பாய்ந்து ஓடும் நீரில் எதிர்த்துச் செல்வது பண்பாட்டுத் தொடர்புடைய செயலே!

காவிரியின் திருப்பெயர்கள் பன்னிரண்டில் கல்யாண தீர்த்தரூபி என்பதும் ஒன்று. திருமண மாலைகளைப் பாதுகாத்து வைத்திருந்து, ஆடிப்பெருக்கில் மணமக்கள் விடுகின்றபோது, காவிரி வழிபாட்டால், நீராட்டால் அவர்கள் மணங்கொண்ட உண்மையை உணரலாம். காவிரி இல்லற இணைப்பிற்குக் காரணமாகியதோடு நில்லாமல் பயிர்வளர்பிற்கும், இல்லற வாழ்வுக்கும் துணையாகும். காவிரி, துறவிற்கும் உறுதுணையாகி நிற்கக் காண்கிறோம். காமத்தை வெல்லக் கருதுவோர் மாலையில் இக்காவிரி ஆடின் காம உணர்வுகள் மடிதல் உண்மை என்பதனால் காமதாயினி எனும் பெயர் காவிரி பெற்றதில் வியப்பில்லை.

திருவாவடுதுறை மடமும், தருமபுர மடமும், திருப்பனந்தாள் மடமும், திருப்பராய்த்துறை மடமும், துறவியர் கூட்டம் பெருகி வளரத்துணை நிற்பதற்குக் காரணம் அவையாவும் காவிரிக் கரையில், ஆம் காம தாயினிக்கரையில் அமைந்ததாலன்றோ? குளித்தலைக்கு அருகே அண்மைக் காலத்து எழுந்த கிரிபித் அடிகளின் ஆசிரமும் காவிரிக்கரையில் அமைந்திருப்பது அன்றைய பண்பாடு, இன்றும் நின்று நிலவுதற்குச் சாட்சியாம்! கிறித்தவர்களின் புனித சின்னப்பரின் குருத்துவமடமும் காவிரிபுரக்கும் திருச்சியில் அமைந்திருப்பது பொருத்தமான சிந்தனையின் வெளிப்பாடாம்.

ஆற்றக்கரையிலேயே நாகரிகங்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன, மடிகின்றன, மாறுகின்றன. ஓர் ஆற்றங்கரை நாகரிகமும், பிறிதோர் ஆற்றங்கரை நாகரிகமும் ஒன்றுபடவும், வேறுபடவும் காண்கிறோம். நீர் உண்டமக்கள் உருவாக்கும் கலைகளும், சிறப்பாக நுண்கலைகளும் நுட்பமாய் வேறுபடுகின்றன. இதனை வள்ளுவர், 'நீரின்றி அமையாது உலாகளின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு' எனக் குறிப்பிடுவார். கோதாவரியினைப் பாடவந்த கம்பர் அதனைச் சான்றோர் கவியொடும் ஒப்பிடும்பொழுது, இரண்டிற்கும் ஒப்புமையாய்த் 'தண்ணென்ற ஒழுக்கம் தழுவிச்சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்' என்பர். கங்கைநீரை உண்டு வாழ்ந்த வால்மீ‌கி, சீதையை இராவணன் முடிபிடித்து இழுத்துத் தூக்கிச் சென்றதாய்க் காட்டுவார். கம்பனோ அதனைப் பண்பாட்டு வடிவமாக்கிப் பூமியொடும் பெயர்த்துத் தூக்கிச் சென்றதாய் மாற்றுவார். வாலியின் மனைவிதாரை தன் கணவனை இழந்தபின் சுக்ரீவனோடு வாழ்ந்ததாய் வால்மீகி வடிப்பார். காவிரிநீர் உண்ட கம்பனோ, வாலியை இழந்ததாரை, சினத்தொடு வந்த இலக்குவன் தாயரை நினைந்து நையக் காரணமான கைம்மைக் கோலத்தோடு வந்ததாய்க் காட்டுவார்.

valmiki
webdunia photoWD
கங்கைபுரந்த வால்மீகி எனும் தவமுனிவர்க்கு, இராமகாதை, வனத்திடையே கிடைத்த பலவின்கனி. காவிரி வெகுண்டபோது, 'கன்னிகரைகடக்கலாமோ' என அடக்கி, காவிரி நீரையே உதரத்திலேயும் உதிரத்திலேயும் கொண்டு வாழ்ந்திருந்த கம்பரோ, பிசின்போக்கி, முள் நீக்கிஈ மெல்லக்கீறிச் சுளையெடுத்துத் தேனும் வார்ந்து பார்க்கு உண்ணக் கொடுக்கிறார். சீதையை இதயமாம் சிறைவைத்த இராவணனை, 'பெண்ணெலாம் நீரேயாக்கிப் பேரெலாம் உமதேயாக்கிக் கண்ணெலாம் நும் கண்ணாக்கிக் காமவேள் எண்ணும் நாமத்து அண்ணல் எண்வானும் ஆக்கி ஐங்கணை கரியத்தக்கப் புண்ணெலாம் எமக்கே ஆக்கி விபரீதம் புணர்த்தவிட்டீர் எனப் பிதற்ற வைக்கும் போதும் கம்பரிடம் காவிரிப்பண்பாடே மிளிர்கிறது. பூவிழந்து, பொட்டிழந்து, வளைதுறந்து, முண்டிதத்தை வெள்ளாடை கொண்டு மூடி, இடக்கை ஒடுக்கி, வலக்கை வாய்பொத்தி, எதிர்ப்படுபவார்க்கு அஞ்சிச் செல்லும் காவிரிக்கரைவாழ் கைம்பெண் கோலமன்றோ தாரை கொண்டது! கொள்ள வைத்தவன் கம்பன் அன்றோ! அவன் காவிரிமகன் அன்றோ! ஆம்! கங்கையிற் புனிதமாய காவிரி!

அடிக்குறிப்புகள்:
1. ஸ்வரூப சைதன்யா, சங்கராச்சாரியாரின் தத்துவ போதா
2. பட்டினத்தார்.
3. வள்ளுவர், குறள்.
4. அரிச்சந்திர புராணம்.
5. அபிதானசிந்தாமணி.

 << 1 | 2   
மேலும்
டோரிஸ் லெஸ்ஸிங் – வாழ்க்கை, போராட்டம், இலக்கியம்!
சுந்தர ராமசாமி - ஓர் எதிர்ப்புக் குரல்
கிராமியக் கலை ஆய்விற்கும் உதவும் நேஷனல் போக்லோர் சப்போர்ட் சென்டர்
சுந்தர ராமசாமி - ஓர் எதிர்ப்புக் குரல்
கிராமியக் கலை ஆய்விற்கும் உதவும் நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டர்