ரத்த வங்கிகளின் வேலை
ரத்தத்தை தானமாக அளிப்பவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை முழுமையான பரிசோதனைக்கு அனுப்புகின்றனர்.
அதாவது, எய்ட்ஸ், பால்வினை நோய், மலேசியா, மஞ்சள் காமாலை போன்று ஏதாவது நோய் தாக்கியிருப்பவரின் ரத்தமா என்பது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் அவை சுத்தமானது என்று தெரியவந்த பிறகுதான் ரத்த வங்கியின் பாதுகாப்பு முறைக்கு தயார் ஆகிறது.
ரத்த பாதுகாப்புக்கான முறைகள் கையாளப்பட்டு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.
இதுபோன்று தானமாக பெறப்பட்ட ரத்தம் சுமார் 35 நாட்கள் வரை பாதுகாக்கப்படும். அதற்குள் பெறப்பட்ட ரத்தத்தை பயன்படுத்திவிடுவது நல்லது.
தற்போது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலான ரத்தத்தில் உள்ள செல்களைத் தனித்தனியேப் பிரித்து பாதுகாக்கும் முறை வந்துவிட்டது.
அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணு, ரத்தத்தை உறைய வைக்கும் செல், பிளாஸ்மா என எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்தெடுத்து அவற்றை பாதுகாத்து வைக்கலாம்.
ரத்த வங்கிகள் தாங்கள் பெறும் ரத்தத்தில் 85 விழுக்காடு ரத்தத்தை இப்படி பிரித்துத்தான் பாதுகாக்கின்றன.
ஏனெனில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படாது. உதாரணத்திற்கு, ஹ்யூமோக்ளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும். தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிளாஸ்மா செல்கள் மட்டுமேத் தேவைப்படும். விபத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்த உறையாதவர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் மட்டுமேத் தேவைப்படும்.
அந்த சமயங்களில் நோயாளிக்குத் தேவையான ரத்தத்தில் இருந்து தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும் செல்கள் மட்டும் அவர்களுக்கு அளிக்கப்படும்.
எனவே ஒருவர் அளிக்கும் ரத்தத்தின் மூலமாக பலர் பயனடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
ரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது ரத்தம் செலுத்த நினைத்தாலோ, பாரத் பிளட் பேங்க், இந்தியன் பிளட் டோனர்ஸ், பிளட் கிவ்வர்ஸ், ஜீவன், பிளட் டெனேஷன், ஆப், ரெட் கிராஸ், ரோட்டரி பிளட் பேங்க் ஆகிய அமைப்புகளின் இணையதளங்களை நாடலாம்.
இந்தியாவில் மொத்தமாக 2,212 ரத்த வங்கிகள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. அதில், மஹாராஷ்டிராவில் 270 ரத்த வங்கிகளும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 240 ரத்த வங்கிகளும், ஆந்திராவில் 222 ரத்த வங்கிகளும் செயல்படுகின்றன.
ரத்தத்தை தானமாக அளிப்போம். உயிர்களைக் காப்பாற்றுவோம்.
|