முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சுற்றுலா > வன உலா
 
இந்தியாவில் 1,300 புலிகளே உள்ளன : அதிர்ச்சித் தகவல்!
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பிபிசி வனவிலங்குகள் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள மற்றுமொரு தகவல் மேலும் அதிர்ச்சியளிப்பதாயுள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 41 சதவீதமாக குறைந்துள்ளது என்பதே அந்த தகவல்.

உலக வனவிலங்குகள் நிதியத்தின் டாக்டர் எரிக் டைனர்ச்டெய்ன் மற்றும் அதனைச் சேர்ந்த 15 நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், "அடுத்த அரை நூற்றாண்டில் புலிகள் இனம் ஒட்டுமொத்தமாக அழிய வாய்ப்பில்லை எனினும், தற்போதைய நிலவரம் மிகவும் மோசமானதாகவே உள்ளது" என்று கூறியுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலை தொடருமாயின் வனவிலங்குகள் மொத்தமும் அழிந்து சூழலியல் பேரழவிக்கு இட்டுச் செல்லும் என்று இவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் புலிகளின் மரபான வசிப்பிடங்களை குறுக்கிக் கொண்டே வந்துள்ளது, உணவுப் பற்றாக்குறை காரணமாக புலிகள் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான பகுதிகளிலேயே இருந்து வருகிறது.

பாரம்பரிய சீன மருந்து உற்பத்திக்காக புலிகளை வேட்டையாடுவது என்பது இன்னமும் பரவலாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கார் வனத்தில் புலிகளே இல்லாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுகளின் அதிர்ச்சி தரும் தகவல்களால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புலிகள் வேட்டைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

மத்திய அரசால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஒன்றும் புலிகள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆணையத்தாலும் வனவிலங்குகளின் அழிவை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால் நிலைமை அவ்வளவு கவலைக்கிடமாயில்லை என்று மற்றொரு நிபுணர் கூறியுள்ளர். அனில், முயல்கள் போலவே சரியான சுற்றுச்சூழல் கொடுக்கப்பட்டால் புலிகளும் இனப்பெருக்கம் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புலிகள் வசிப்பிடங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு புலிகள் ஓரிடம் விட்டு வேறிடம் செல்ல வழி வகை செய்தால் ஓரளவு நிலைமைகளை சமாளிக்கலாம் என்று இந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் நிலைமைகள் நம்பிக்கை அளிப்பதாயில்லை என்றே தெரிகிறது. நமது தேசிய விலங்கு முற்றிலும் அழியும் நாட்கள் எண்ணப்பட்டு விடலாம் என்றே தெரிகிறது.
 
 << 1 | 2   
மேலும்
கிண்டி தேசிய பூங்கா
முதுமலை சரணாலயம்