முக்குருத்தி வனப்பகுதி
அங்கிருந்து (வனத்துறையின் அனுமதி பெற்று) முக்குருத்தி காட்டிற்குள் (மின்வாரியம் அமைந்துள்ள சாலையின் வழியாக) சென்றால் சிறிது தூரத்தில் மடிப்பு மலை என்று அழைக்கப்படும் வளைவு வளைவாய் அமைந்துள்ள மலைப் பகுதியைக் காணலாம். இந்த மலைப் பாறைகள் மிகக் கடினமானதானதால் வெறும் புற்கள் மட்டுமே முளைத்து தனி எழிலுடன் காணப்படுகின்றன. அந்த இடத்தில் மட்டும் ஓரிரு மணி நேரங்கள் மகிழ்ச்சியாக கழிக்கலாம்.
அங்கிருந்து மேலும் 2 கி.மீ. பயணம் செய்தால் மேல் பவானி அணையின் மற்றொரு பகுதிக்கு வரலாம். கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அந்த இடத்தில் இருந்து மீண்டும் தமிழக மின் வாரியத்தின் சாலையில் ஒரு அரை மணி நேரம் பயணித்தால் (பயங்கரமான பயணம்தான்) நீங்கள் அழகிய முக்குருத்தி வனப்பகுதியை அடைவீர்கள்.
எப்போதும் சாறலுடன் தூறிக் கொண்டிருக்கும் மழைக்கு இடையே நீங்கள் காணும் தாவரங்கள் வேறு எங்கேயும் கண்டிருக்க முடியாது. அவ்வளவு பசுமையாய், கண்ணிற்கு குளிர்ச்சியாய், சிறிதும் பெரிதுமாக பல குற்று மரங்கள், செடிகள்... அந்த அழகிற்கு ஈடேது.
அங்கே இருந்து மறு பகுதிக்கு கீழிறங்கி வந்தால் ஒரு குளிர்ந்த நீரோடையைக் காணலாம். மழைப் பொழிவால் அந்த ஓடையில் பெருக்கெடுக்கும் தண்ணீர் அங்குள்ள சுரங்கம் வழியாக மலையின் மறுபக்கத்தில் உள்ள அவலாஞ் அணைக்குச் செல்கிறது.
இந்த ஓடையில் வெள்ளையர்கள் கொண்டு வந்த வளர்த்துவிட்ட டிரெளட் எனும் அரிய வகை மீனினம் உள்ளது. நீரின் போக்கிற்கு எதிராக நீந்தக் கூடிய மீனினம் இது. இதன் உடலில் வானவில்லைப் போன்ற வண்ணங்கள்... நிச்சயம் கொல்லத் தோன்றாது.
இங்கு புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள் என்று எல்லா விலங்கினங்களும் உண்டு. கூட்டமாகத்தான் செல்ல வேண்டும். தங்கும் வசதி ஏதும் இல்லை. தலைகுந்தாவில் தங்கி அங்கிருந்துதான் மேல் பவானிக்கு வர வேண்டும். ஆனால் நமது வாழ்வில் (எப்பாடுபட்டாவது அனுமதி பெற்று) நிச்சயம் காண வேண்டிய இடம் வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் 3.
இதுபோலவே வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் 1, வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் 2 ஆகியனவும் எழிலார்ந்தவை. அவைகள் அடுத்தடுத்த வாரங்களில்...
|