தமிழில் குறும்பட, ஆவணப்பட வளர்ச்சி அபரிதமாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை அறியப்படாத பகுதிகளாக இருந்த சலன ஊடகத்தின் இப்பிரிவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் நிழல் இதழுக்கும், தமிழ்நாடு குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கத்திற்கும் பெரும்பங்கு உள்ளது.
நிழல் இதழும், படைப்பாளிகள் சங்கமும் இணைந்து சென்னையில் ஏழு தினங்கள் குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறையை நடத்த இருக்கின்றன. இதையொட்டி, நிழல் இதழின் ஆசிரியரும் குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமான வி.திருநாவுக்கரசைச் சந்தித்தோம்.
உங்களுடைய நிழல் இதழ் முழுக்க சினிமாவுக்கானது. அதில் குறும்பட, ஆவணப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறீர்கள். அது ஏன்?
விஷூவல் மீடியாவின் பல பிரிவுகளில் ஒன்றுதான் திரைப்படம் என்று சொல்லப்படுகிற பியூச்சர் ஃபிலிம். இதுதவிர குறும்படம், ஆவணப்படம் என்கிற பிரிவுகளும் இருக்கு. ஆனா, இதுகுறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இல்லை. இங்குள்ள பெரியவர்களும் குறும்படங்கள், ஆவணப் படங்களுக்கு என்று தனியாக திரைப்பட விழாக்கள் இருப்பதைச் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். அதனால்தான் குறும்பட, ஆவணப் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
தமிழ்நாடு குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கம் தொடங்கக் காரணம் என்ன?
குறும்பட, ஆவணப்பட இயக்கத்தை துரிதப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட சங்கம்தான் இது. இந்தச் சங்கம் மூலம் உள்நாடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் தமிழ்க் குறும்படங்களைக் கொண்டு செல்கிற பணிகளைச் செய்கிறோம். பரிசுகள் வாங்கித் தருகிறோம்.
|