செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (10:45 IST)

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் குழந்தை உரிமைகள் மையம்!!

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் எஸ்ஆர்எம் அறக்கட்டளை மூலமாக குழந்தை உரிமைகள் மையம் தொடங்கப்பட உள்ளது.


நாட்டில் முதல் மையமாக டாக்டர் கைலாஷ் சத்யார்தி குழந்தை அறக்கட்டளையுடன் இணைந்து இந்த மையம் அமைக்ப்பட உள்ளதாக எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் தெரிவித்துள்ளார்.
 
அமைதிக்கான நோபல் விருது பெற்றவர் டாக்டர் கைலாஷ் சத்யார்தி, இவர் ஏற்படுத்திய கைலாஷ் சத்யார்தி சிறார் நல மையம் மூலமாக இந்தியா ,வங்காள தேசம், மியான்மர் நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்ட சுமார் 83 ஆயிரம் சிறார்களுக்கு கல்வி மறுவாழ்வு மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றியதுடன், அவர் உருவாக்கிய சமுதாய தனி உரிமைகள் நெட்வொர்க் மூலமாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை செயல்களை வெளிக் கொணர்ந்து அவர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகிறார்.
 
அமைதிக்கான நோபல் விருது பெற்ற டாக்டர் கைலாஷ் சத்யார்தி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ( SRMIST- SRM Institute of Science and Technology ) வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். 
 
இதற்கான நிகழ்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பல்லாயிரம் மாணவர்கள் மத்தியில் நோபல் விருது பெற்ற டாக்டர் கைலாஷ் சத்யார்தி மாணவர்களிடையே உற்சாகம் பெருக பேசியதாவது: 
 
இந்த நிகழ்ச்சியானது எனது மனதை தொட்ட நிகழ்வாகும் காரணம் எதிர் காலத்தில் மாற்றத்தை உருவாக்க உள்ள உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடிமைத்தனம் உருவாக கல்வி, ஏழ்மை நிலையே காரணமாக உள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடமைத்தனம் இருந்து வருகிறது, இதற்கான தீர்வு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் காணவேண்டும். 
 
குழந்தை தொழிலாளர் பற்றி யாரும் பேசாத நிலை உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண எனது வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டேன். 152 மில்லியன் குழந்தைகள் கழிப்பிட வசதி இல்லாத நிலை, அதேபோல் 262 மில்லியன் குழந்தைகள் கல்வி வசதி இல்லாத உள்ளது. கிழக்கு மத்திய பிராந்தியத்தில் நாள்தோறும் சுமார் 100 பெண்கள் கடத்தப்படும் நிலை உள்ளது.
 
இதனை ஒழிக்க 103 உலகளாவிய பேரணி நடத்தி சுமார் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குழந்தை தொழிலாளர் சம்மந்தமாக எனது அமைப்பு மூலமாக காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பேரணி நடத்தினேன். 
 
இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் 169 எம்பிக்கள்பங்கேற்றனர். இதன் எதிரொலியாக 1986-குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. மாற்றத்தை உருவாக்கும் தன்மை படைத்தவர்கள் இளைஞர்கள், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் பொறியியல் மாணவர்கள் உருவாக்க வேண்டும்.    
 
நாட்டில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மாற்றத்திற்கான செயலில் தனது மாணவர்களை ஈடுபடுத்தி வருவது வரவேற்க தக்கது என்றார்.
நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் தலைமை வகித்து பேசியதாவது:
 
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆண்டு தோறும் 400 மாணவர்களுக்கு இலவச அட்மிஷன் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்க பாடுபட்டவர் ஆப்ரகாம் லிங்கன் ஆவார். 
 
இங்கு வருகை தந்துள்ள நோபல் விருது பெற்ற டாக்டர் கைலாஷ் சத்யார்தி இந்தியாவின் ஆப்ரகாம் லிங்கனாக விளங்குகிறார்.ஒரு சில மனிதர்கள் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அத்தகைய பெருமைக்குரியவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
 
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் எஸ்ஆர்எம் அறக்கட்டளை மூலமாக குழந்தை உரிமைகள் மையம் தொடங்கப்படும். டாக்டர் கைலாஷ் சத்யார்தியின் குழந்தைஅறக்கட்டளை துணையுடன் அமைய உள்ள இந்த மையத்தில்100 மில்லியன் இளைஞர்கள் பங்கேற்பார்கள்.
 
100 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை தொழிலாளர் முறை உள்ளது. குழந்தைகள் கல்வி பெற வேண்டும் வறுமை காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு வருவது தடைபடக் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் மத்திய உணவு திட்டத்தை அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தார். இதுவே நாட்டில் முதன் முதலாக கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும் என்றார்.
 
நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை துணைவேந்தர்கள் முனைவர் டி.பி.கணேசன், முனைவர் ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குநர்கள் டீன்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர். முடிவில் பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் நன்றி கூறினார்.