வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (18:08 IST)

காஷ்மீரில் புதிய சட்டங்களால் அமைதி தோன்றுமா? புதிய சிக்கல்கள் தோன்றுமா?

காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ஐ நீக்க வேண்டும் என்பதே எப்போதும் பாஜகவின் கொள்கையாக இருந்துவருகிறது.


 
ஆனால், இந்த சிறப்புரிமையை நீக்குவதற்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் வரலாறு காணாதது என்று காஷ்மீர் மாநில விவகாரத்தை கவனிப்பவர்கள், அரசால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தையாளர்கள் கூறுகிறார்கள்.
 
அத்தகைய நபர்களில் ஒருவர் ராதாகுமார்.
 
பிபிசியிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக சமூக ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் ஸ்திரத்தன்மையோடு இருக்கவில்லை என்கிறார்.
 
இதுவரையிலான சூழ்நிலைகள், மனப் பதற்றத்தை நோக்கியே இட்டுச்செல்கின்றன என்கிறார் அவர்.
 
"இந்த மனப் பதற்றங்களை சரி செய்யாவிட்டால், அது வேறுவிதமான மனக்கசப்புகளைத் தோற்றுவிக்கும்" என்கிறார் அவர்.
 
கடந்த பல தேர்தல்களின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ஐ ஒழிக்கப்போவதாக தெரிவித்துவந்துள்ளது.
 
"தமிழகத்தை யூனியன் பிரதேசமாக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" - திருச்சி சிவா
சட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி என்னென்ன நிகழும்?
காஷ்மீர் சட்டத் திருத்தம்: எதிர்க்கும் மு.க.ஸ்டாலின், வைகோ, ஆதரிக்கும் அதிமுக
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால் இந்தக் கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணியாகப் பார்க்கப்பட்டது.
 
தொடக்கத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் பிறகு கூட்டணியில் பிளவுகள் தோன்றி கடைசியில் உடைந்தேபோய்விட்டது. அதன்பிறகு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.
 
அது முதல் கவர்னர் மூலமாக பாஜக ஆட்சியை நடத்திவருகிறது. மாநில சட்டமன்றத்துக்கு மீண்டும் தேர்தல் வரும் என்று அவ்வப்போது கணிக்கப்பட்டது. ஆனால், நடக்கவில்லை. "ஜனசங்க காலத்தில் இருந்தே ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலில் கால்பதிக்க பாஜக முயன்று வந்தது" என்று கூறுகிறார் மூத்த இதழாளர் ராகுல் பாண்டிட்டா.
 
"இந்த மாநிலத்தின் அரசியல் விவகாரங்களில் தமது நேரடித் தலையீடு வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. எனவேதான் கீழ்மட்டத்தில்கூட புதிய தொண்டர்களை சேர்க்க அந்தக்கட்சி முயன்று வருகிறது. அவர்கள் பலம் பெற்றுவருவதாக காட்டும்போது, மக்களை கட்சிக்குள் கொண்டுவருது எளிது என்று அந்தக் கட்சி நினைக்கிறது. பாஜக தமது தொண்டர் பலத்தை, திட்டமிட்டு, வேகமாக அதிகரித்துவருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்கிறார் அவர்.


 
"ஆயுதப் படையினரை பெருமளவில் குவிப்பது, ஊரடங்குச் சட்டம் அமல்படுத்துவது, தலைவர்களை வீட்டுச் சிறையில் வைப்பது, இணையச் சேவைகளைத் துண்டிப்பது ஆகியவை தேவையற்றவை" என்கிறார் அரசு நியமித்த பேச்சுவார்த்தையாளர் ராதா குமார்.
 
"யாரைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்? ஒமர் அப்துல்லாவும், மெஹபூபா முஃப்தியும் கிளர்ச்சியா செய்வார்கள்? தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அரசு என்ன முடிவு வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், ஏன் இப்படியெல்லாம்?" என்று கேட்கிறார் அவர்.
 
இந்த முன்மொழிவுகள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் முன்பே அர்நாத் யாத்ரீகர்கள் பாதியில் நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், புதிய சட்டங்கள், குறிப்பாக மாநிலத்தைப் பிரிக்கும் சட்டம், அம்மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்குப் பதில், மேலும் பதற்றத்தையே உருவாக்கும் என்று காஷ்மீர் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.