1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (08:16 IST)

‘இந்திய அணி ஏன் ஐசிசி கோப்பைகளை வெல்வதில்லை’… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

நடந்து வரும் டி 20 உலகக் கோப்பையை எப்படியாவது இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதுதான் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆசை. ஏனென்றால் இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக தோனி தலைமையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றது.

அதன் பின்னர் நடந்த எல்லா ஐசிசி தொடர்களிலும் மிக சிறப்பாக விளையாடினாலும் நாக் அவுட் அல்லது இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறுகிறது. இதனால் கிரிக்கெட் உலகில் புதிய ‘ச்சோக்கர்ஸ்களாக’ உருவாகியுள்ளது. இது குறித்து பல முன்னாள் வீரர்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணி குறித்து பேசும்போது “ஐசிசி தொடர்களில் விளையாடும்போது மனத்தெளிவு வேண்டும். நாம் செய்யவேண்டிய பணி என்ன என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைத் தாண்டி வேறு எதையும் யோசித்து, வெளியில் இருந்து வரும் அழுத்தத்துக்கு ஆளாகக் கூடாது.

இந்திய அணியைப் பொறுத்தவரை அங்கு திறமைக்கு பஞ்சமே இல்லை. ஆனால் அவர்களால் உலகக் கோப்பை தொடர்களில் வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் மனதைத் தெளிவாக்கி எப்படி நெருக்கடிகளைக் கையாள வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.